மதுரை: அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து நாளை காலை உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்போதே தெரியும்.
ஆனால், பொதுக்குழு நடந்தால் அதில் நிறைவேறப்போகும் தீர்மானங்கள் என்னவாக இருக்கும்? நடக்காவிட்டால் என்ன மாதிரியான சவால்கள் ஏற்படும்? போன்ற சூழல்களை நேரடியாகக் காண இன்று காலை தென் மாவட்டங்களில் இருந்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமில்லாது ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் சென்னைக்கு புறப்பட்டனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட்டம் திங்கட்கிழமை (ஜூலை 11) சென்னையில் நடக்கிறது. இதில் தற்காலிக பொதுச்செயலாளராக கே.பழனிசாமியை தேர்வு செய்ய அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மற்றொரு புறம் இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை நாளை (திங்கட்கிழமை) காலை 9.00 மணிக்கு தீர்ப்பு வர உள்ளது. 9.15 மணிக்கு பொதுக்குழு நடக்கும் என கே.பழனிசாமி தரப்பினர் அறிவித்துள்ளனர். அதனால், பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? என்ற பரப்பான சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் சென்னையை நோக்கி இன்று காலை முதல் படையெடுக்க தொடங்கினர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வாகனங்களில் பொதுக்குழு, செயற்குழு நிர்வாகிகள் மட்டுமில்லாது பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கார்கள், வேன்களில் சென்னைக்கு புறப்பட்டனர்.
அதனால், மாவட்ட கட்சி அலுவலகங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஒரளவு இருக்கும் மாவட்ட அலுவலகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டப்பட்டிருந்தன. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால், பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள், எடப்பாடி கே.பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்பதை அறிந்துகொள்ள அவரது ஆதரவாளர்கள் ஆவலாக உள்ளனர். அதேநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதித்தால் அதை கொண்டாடுவதற்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் தமிழகம் முழுவதும் இருந்து சென்னையில் குவிந்துள்ளனர்.
இரு தரப்பு நிர்வாகிகளும் சென்னையில் குவிந்துள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நாளை காலை வழங்கப்படும் உயர் நீதிமன்றம் தீர்ப்பை பொறுத்து அதிமுகவில் அடுத்தக்கட்ட அரசியல் மாற்றங்கள் ஏற்பட தொடங்கும்.
அது ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக இருந்தால் கே.பழனிசாமி தரப்பினர் எதிர்வினை என்னவாக இருக்கும் கே.பழனிசாமிக்கு சாதகமாக இருந்தால் பொதுக்குழுவில் என்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவார்கள்? அதிமுகவில் எத்தகைய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் போன்றவை அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.