மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்ட நடிகர், இயக்குனர்

திருவனந்தபுரம்: மாற்றுத்திறனாளிகள் குறித்து திரைப்படம் ஒன்றில் சர்ச்சையான கருத்து வெளியான நிலையில், அதற்காக பிருத்விராஜ், இயக்குனர்  ஷாஜி கைலாஷ் மன்னிப்பு கேட்டுள்ளனர். மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருத்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியான ‘கடுவா’ படத்தில், ‘மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம்தான் காரணம்’ என்ற அர்த்தத்தில், படத்தின் ஹீரோ சொல்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையர் ஷைலஜா, ‘கடுவா’ படத்தின் இயக்குனர் ஷாஜி கைலாஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் சுப்ரியா மேனன், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கிறார். அந்த நோட்டீசில், ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன் பிரிவு 92ன் கீழ், மேற்கண்ட திரைப்படத்தில் காட்டப்படுகின்ற காட்சிகள் குற்றமாகும். எனவே, இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நேற்று பிருத்விராஜ் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ‘மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக எனது ‘கடுவா’ படத்தில் வரும் காட்சி, யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்வுகளை நாங்கள் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார். அதுபோல் ஷாஜி கைலாஷ் வெளியிட்ட பதிவில், ‘நான் இயக்கியுள்ள ‘கடுவா’ படத்தில் வருகின்ற வசனத்தை மனித தவறாகப் பார்க்கிறேன். எனவே, மனித தவறை மன்னிக்கும்படி வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.