அசாமில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வீதி நாடகம்: சிவன், பார்வதி வேடத்தில் நடிகர், நடிகை போராட்டம்

கவுகாத்தி: விலைவாசி உயர்வுக்கு எதிராக சிவன், பார்வதி வேடத்தில் வீதி நாடகம் நடத்தி பார்வையாளர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகரும், நடிகையும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் பிரின்சி போரா. இவரும் சக நடிகை பரிஷ்மிதா தாஸ் என்ற பெண்ணும் சிவன், பார்வதி வேடத்தில் அசாம் மாநிலத்தின் நகான் நகரில் புல்லட் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை வலம் வந்தனர்.

காலேஜ் சவுக் பகுதியில் இவர்கள் இருவரும் வீதி நாடகம் நடத்தினர். அவர்கள் வந்த வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்தது போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நாட்டில் உணவு, எரிபொருள் மற்றும் இதர எரிபொருட்களில் விலை உயர்ந்து விட்டதாக வசனம் பேசி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். முதலாளிகளின் நலனுக்காக மட்டுமே அரசு செயல்படுகிறது, சாதாரண மக்கள் பற்றி கவலைப்படவில்லை எனவும் விமர்சித்தனர்.

பின்னர் பார்வையாளர்களுடன் இணைந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதன்பின் படா பஜார் பகுதிக்கு சென்று இதேபோல் தெரு நாடகம் நடத்தினர்.

இவர்கள் சிவன், பார்வதி வேடத்தில் அரசை விமர்சனம் செய்து தெரு நாடகம் நடத்தியதற்கு நகான் மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தன. இருவருடைய செயல்களும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக நகான் சதர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

முதல்வர் தலையீடு: இதையடுத்து தெரு நாடகத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். இதன்பின் இந்த விஷயத்தில் தலையிட்ட அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வா சர்மா, நடப்பு விஷயங்கள் குறித்து தெரு நாடகம் நடத்துவது குற்றம் இல்லை என்று கூறினார்.

அவர்கள் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் எதுவும் கூறவில்லை. சிவன், பார்வதி போல் உடையணிந்து தெரு நாடகம் நடத்துவது எந்த வகையிலும் மதத்துக்கு எதிரானது அல்ல என்றார்.

இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கவும் நகான் மாவட்ட போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நாடக நடிகர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, அவர்களை ஜாமீனில் போலீஸார் விடுவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.