அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதில் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.
அதில், நான்கு மாதத்திற்குள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொது செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. அதிமுகவின் கட்சி விதிகளுக்கும், அதிமுகவிற்கு துரோகம் செய்யக்கூடிய வகைகளும் செயல்பட்டதால், அதிமுகவின் பொருளாளர் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
இந்நிலையில், அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதனிடையே, அதிமுக அலுவலகத்தில் மோதல் வெடித்த நிலையில், அலுவலகத்திற்கு சீல் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்க வந்துள்ளனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகம் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.