டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் பண பரிவர்த்தனையில் ஈடுபட கூடாது என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உத்தரவை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர் பண பரிவர்த்தனை செய்தது தொடர்பாக விஜய் மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கடந்த 2014ம் ஆண்டில் விஜய் மல்லையாவை குற்றவாளி என உறுதி செய்தது. அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மல்லையா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் அவர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக பலமுறை சுப்ரீம் கோர்ட் வாய்ப்பளித்தது. எனினும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை கடந்த மார்ச் 10ம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், அந்த வழக்கு இன்று நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ரூ. 318 கோடி பணத்தை வட்டியுடன் 4 வாரத்துக்குள் செலுத்த மல்லையாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணத்தை செலுத்த தவறினால் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.