புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய வன பாதுகாப்பு விதிமுறைகள், கோடிக்கணக்கான ஆதிவாசிகள் மற்றும் வனப்பகுதிகளில் வசிப்பவர்களின் உரிமைகளை பறிக்கும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பிரதமர் மோடி அரசின் புதிய வன பாதுகாப்பு விதிமுறைகள், வனப்பகுதிகளில் வசிப்பவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் பொறுப்பை மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு மாற்றுகிறது. இதன் மூலம் பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகுகிறது. இது வனப் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் வனப் பகுதி நிலங்களை எளிதாக பறிக்கும் நடவடிக்கை.
எளிதாக தொழில் செய்தல் என்ற பெயரில், புதிய விதிமுறைகள் மூலம் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மோடியின் நண்பர்களுக்கு மட்டுமே உதவும். வனப்பகுதி நிலங்களை எளிதாக பறிப்பதற்காக, ஐ.மு.கூட்டணி அரசின் வன உரிமைகள் சட்டத்தை மாற்றி, புதிய வனப்பாதுகாப்பு விதிமுறைகளை பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ளது.
வனப்பகுதிகளை அழிப்பதற்கு முன்பு, பழங்குடியினர் மற்றும் வனப் பகுதிகளில் வசிப்பவர்களின் சம்மதத்தை பெற வேண்டும் என்ற பொறுப்பு மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு சென்றுள்ளது. முந்தைய விதிமுறைகள் படி, வனப்பகுதி நிலத்தை தனியார் திட்டங்களுக்கு வழங்க வேண்டும் என்றால், வனப் பகுதிகளில் வசிப்பவர்களின் சம்மதத்தை பெற வேண்டும். இனி இந்த விஷயம் குறித்து மாநிலங்கள்தான் முடிவு செய்யும்.
ஆதிவாசிகள் தங்களின் நீர், வனம் மற்றும் நிலங்களை பாதுகாக்கும் போராட்டுத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், வன உரிமைகள் சட்டம், 2006-க்கு ஏற்ற வகையில் வன பாதுகாப்பு சட்டம் 1980 அமல்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு நாடாளுமன்ற அளித்த பொறுப்பிலிருந்து மோடி அரசு விலகி செல்கிறது’’ என கூறியுள்ளார்.