தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப் படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்காலிக ஆசிரியர்களாக இப்போது நியமிக்கப்படுபவர்கள், எதிர்காலத்தில் பணி நிலைப்பு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், அப்போதும் இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படும் என்பதால் இது போக்க முடியாத சமூக அநீதியாக அமைந்து விடக்கூடும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளை நடத்தி, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 ஆசிரியர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 28,984 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 50,648 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்விலும், மதுரை அமர்விலும் தொடரப்பட்டுள்ள இரு வழக்குகள் காரணமாக தற்காலிக ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை தடைபட்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால், எந்த நிமிடமும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடங்கி உடனடியாக முடிக்கப்படும்.
ஆனால், 13,331 ஆசிரியர்களை நியமிப்பதில் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இதுபற்றி கேட்ட போது, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பள்ளிகள் அளவில், பள்ளி மேலாண்மை குழுவால் மேற்கொள்ளப்படவிருப்பதால், அதில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று விளக்கம் கிடைத்திருக்கிறது.
இந்த விளக்கத்தை ஏற்கவே முடியாது. நியமன நடைமுறைகளை காரணம் காட்டி இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என்று பள்ளிக்கல்வித்துறையே கூறுவது தமிழ்நாட்டில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இந்த சமூக அநீதியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
தற்காலிக ஆசிரியர்கள் அதிகபட்சமாக 10 மாதங்களுக்குத் தான் நியமிக்கப்படவிருக்கின்றனர்; உள்ளூர் அளவில் தான் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவிருக்கிறது; பெரும்பான்மையான பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் தான் நியமிக்கப்படவுள்ளனர் என்பன போன்றவை இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கு நியாயமான காரணங்கள் அல்ல. மாறாக, இட ஒதுக்கீட்டை மறுக்கவும், வேண்டியவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவும் தான் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ? என்ற ஐயம் எழுகிறது.
ஆசிரியர்கள் நியமனம் தற்காலிகமானது என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த காலங்களில் இதே போல் நியமிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக பணியில் நீடிக்கின்றனர். இப்போதும் கூட தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை செப்டம்பருக்கு பிறகு தான் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான பணிகள் இன்னும் நிறைவடைய வில்லை. அதேபோல், இப்போதும் நிரந்தர ஆசிரியர்களை தேர்வு செய்ய அதிக காலம் ஆகக்கூடும். அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வுபெற இருப்பதால், புதிதாக ஏற்படக்கூடிய காலியிடங்களை சமாளிக்க தற்காலிக ஆசிரியர்களுக்கு பணிக்காலம் நீட்டிக்கப்படக்கூடும்.
தமிழக அரசு கல்லூரிகளில் 5,584 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்ட போதும் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றால், அதனால் சமூகநீதிக்கு ஏற்படும் பின்னடைவை சரி செய்ய முடியாமல் போய்விடும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படக் கூடாது; காலமுறை ஊதிய அடிப்படையில் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தவிர்க்க முடியாமல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், அதில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இதை தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக முதலமைச்சர் அறிவிப்பது தான் குழப்பங்களைத் தீர்க்கும்.
தற்காலிக ஆசிரியர்களை பள்ளி அளவிலும், கவுரவ விரிவுரையாளர்களை கல்லூரி அளவிலும் நியமனம் செய்வது இட ஒதுக்கீட்டை புறக்கணிப்பது மட்டுமின்றி, தகுதியானவர்களை ஒதுக்கி விட்டு நிர்வாகத்திற்கு வேண்டியவர்களை நியமிப்பதற்கும் வழிவகுக்கும்.
அதனால், தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரித்து, மாநில அளவில் கலந்தாய்வு நடத்தி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக மட்டும் தான் அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும், சமூக நீதியை பாதுகாக்கவும் முடியும் என்பதை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை உணர வேண்டும்” என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.