திருவனந்தபுரம்: கேரளாவில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளதால் இன்று 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கேரளாவில் பரவலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெற்கு ஒடிஷாவுக்கு மேல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் வரும் 4 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 12 மாவட்டங்களுக்கும் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கன மழை காரணமாக காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.