காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து கிளிநொச்சி முறிகண்டி புகையிரத நிலையம் வரையிலான “யாழ். ராணி” புகையிரத சேவை இன்று காலை (2022.07.11) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
“யாழ்.ராணி” புகையிரத சேவை காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி முறிகண்டி புகையிரத நிலையத்தை சென்றடையுமென மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
இப் புகையிரத சேவை உரிய நேர அட்டவணையின்படி தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதோடு, நாளாந்த கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள், தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தற்போதுள்ள அசாதாரண சூழலில் நன்மையளிக்கக்கூடியதாகயிருக்கும் எனவும் அரசாங்க அதிபர் மேலும்
தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட புகையிரத நிலையத்தில் நடைபெற்ற இவ் உத்தியோகபூர்வ ஆரம்பநிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், அனுராதபுர பிரதேச போக்குவரத்து பொறுப்பதிகாரி பி.என்.என்.விசுந்த, யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன், கடற்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி ருசாங்கன் மற்றும் யாழ்.நகர இராணுவ கட்டளைத்தளபதி, புகையிரத நிலைய அதிபர்கள், புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடித்தக்கது.