ஒரு ஆட்டோவில் 27 பயணிகள்: அதிர்ச்சியில் உறைந்த உ.பி போக்குவரத்து போலீஸ்

லக்னோ: ஒரே ஆட்டோவில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 27 பேர் பயணம் செய்து போக்குவரத்து காவல்துறைக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிவேகத்தில் பாய்ந்த அந்த ஆட்டோவை மறித்து அதிலிருந்து ஒவ்வொரு நபராக இறக்கி அனைவரையும் போலீஸார் எண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிந்தி கோட்வாலி மற்றும் ஃபதேபூர் இடையே ஒரு ஆட்டோ அளவுக்கு அதிகமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை போக்குவரத்து காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் நிலவரத்தை அறிந்து ஆட்டோவை ஓரங்கட்டினார். அப்போது உள்ளே இருப்பவர்களை இறங்கச் சொல்லி போலீஸார் கூற ஏதோ 5, 6 பேர் வருவார்கள் என்று பார்த்தால் ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர். 6 பேர் மட்டுமே அதிகபட்சமாக அமரக்கூடிய அந்த ஆட்டோவுக்குள் ஓட்டுநர் உள்பட 27 பேர் இருந்தனர்.

இதுபோன்ற சம்பவம் நடப்பது முதன்முறையல்ல என்று கூறுகின்றனர் உ.பி. போக்குவரத்து காவல்துறையினர். உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. 2019 ஆம் ஆண்டு ஒரே நாளில் உ.பி.யில் 21 ஓவர் லோட் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2021ல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 நாட்கள் தொடர்ச்சியாக அதிகமாக ஆட்களை ஏற்றிய ஆட்டோக்கள் ரெய்டு செய்யப்பட்டன. அப்போது 630 ஆட்டோக்கள் சிக்கின.

வாகனத்தில் அளவுக்கு அதிகமாக ஆட்களோ, சரக்கோ ஏற்றினால் விபத்துக்கு வாய்ப்பு மிகமிக அதிகம் என்பது தெரிந்தும் கூட இது மாதிரியான சம்பவங்கள் குறைவதில்லை. போதிய அளவு பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இல்லாததும் இது போன்ற தனியார் ஆட்டோக்கள், கேப்கள் மனித உயிர்களுடன் விளையாடும் சம்பவங்கள் நடக்கக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.