வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இது ஒரு அனுபவம்.
வாழ்க்கையில் சிலர் மற்றவர்களுக்கு எப்படி முன்னோடியாகவும் வாழ்க்கை கொடுக்கும் சவால்களை எப்படி கையாள வேண்டும் என்றும் வாழ்ந்து காட்டிக் கொண்டே இருப்பார்கள் நம் கண் முன்னே..
நாம் அதை கவனித்து நம்மை எப்படி பண் படுத்திக் கொள்ளலாம் என்பதே இந்த அனுபவத்தின் பாடம்.
ரோஷன் ஒரு சிறப்பான விசேஷமான குழந்தை என்று எடுத்துக் கொள்ளலாம்.
அவனுக்கு 7 வயதிலேயே மூளை காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது. பேச முடியாது. நடக்க முடியாது. சாப்பிட முடியாது. அவனைப் பார்த்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல.
ஆஸ்திரேலியாவில் வசித்ததால் மருத்துவ உதவி மிகச் சிறப்பாக அவனுக்குக் கொடுக்கப் பட்டது.
மருத்துவர்கள் அவனால் 11 அல்லது 12 வயது வரை மட்டுமே வாழ முடியும் என்று கூறிவிட்டார்கள்.
ஆனால் அவன் 31 வயது வரை வாழ்ந்து அவனை சுற்றி இருந்தவர்களால் வாழ்க்கை எவ்வளவு அழகானது. அன்பானது. கருணையானது. அர்ததமுள்ளது என்று காட்டி விட்டு மறைந்து போனான்.
எங்கள் உள்ளத்தில் இன்னும் இருக்கிறான். ஏன் என்றால் அவன் எங்களுக்குக் கொடுத்த அனுபவத்தினால்.
எப்படி என்கிறீர்களா?
இப்படித்தான்:
என் தோழி – ரோஷனின் அம்மா – கண்ணின் மணியாக பார்த்துக் கொண்டாள். வேலைக்கும் போய் அவன் தேவைகளை பூர்த்தி செய்து அடிக்கடி மருத்துவ மனைக்குப் போய் ..இப்படியே இருந்தது அவளின் இளமைக் காலங்கள்.
ரோஷனின் அப்பா – அவரைப் பார்க்கும் போதெல்லாம் கடவுளையே பார்ப்பது போல இருக்கும். அலுப்பு சலிப்பில்லாமல் மிக்க அன்போடு தன் மகனை கவனித்துக் கொண்டார். இவரின் இளமைக் காலமும் ரோஷனை பார்த்துக் கொள்வதிலும் அதற்கான முயற்சிகளை மேற் கொள்வதிலுமே கழிந்தது.
இவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். கடவுள் என்னிடம் மிகவும் கருணையாக இருந்திருக்கிறார். என் முன் இருக்கும் சவால்களை என்னால் சமாளிக்க முடியும் என்று. சமாளிக்கவும் செய்தேன்.
என் தோழியின் பெற்றோர் – அவர்களும் இந்தியாவில் இருந்து இங்கு வந்து விட்டார்கள் பேரனை கவனித்துக் கொள்ள..
அவர்களின் மற்ற உறவினரும் உதவினர். மருத்துவர்களும், செவிலியர்களும் செய்த சேவையும் உதவியும் எண்ணிலடங்காது.
ரோஷனுக்கு அன்பு அபரிதமாக கொடுக்கப்பட்டது. அதனாலேயே அவனால் 31 வருடங்கள் வாழ முடிந்தது.
இங்கெல்லாம் இறுதிச் சடங்கின் போது அமரரின் உற்றோர் உரை நிகழ்த்துவார்கள்.
ரோஷனின் பாட்டி பேசும் போது ஒன்றை குறிப்பிட்டார்.
”எங்கள் பாவம் நீக்க இப்பிறவி நீ எடுத்தாயோ என்று”
அப்போது தோன்றியது கடவுளின் படைப்பின் காரணம்.
வாழ்க்கையில் ஏதோ ஒன்றை தேடுகின்றோம். கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை கசக்கிறது என்கிறோம்.
ஆனால் ரோஷனின் போராட்டமான ஓவ்வொரு நாட்களையும் நினைக்கும் போது நம் எதிர்பார்ப்புகள் எவ்வளவு அற்பமானது என்று தோன்றுகிறது.
ரோஷனின் முகத்தில் ஒரு நாளும் நான் வலியை பார்த்ததில்லை. அழகான புன் சிரிப்பையே பார்த்திருக்கிறேன்.
வலியை கையாள அவனிடமிருந்தே பாடம் படித்தேன்.
அவனின் உற்றார், உறவினர், மருத்துவர்கள், செவிலியர்களிடம் அன்பையும்,, பண்பையும், கருணையையும் பார்த்தேன்.
இப்போதிருக்கும் அவசர உலகில் இவை நம் கண்களுக்கு புலப்படுதில்லையோ என தோன்றுகிறது!!
வாழ்வின் மற்ற பக்கங்களையும் காட்டிய அவன் பலருக்கு குரு.
ரோஷனைப் போன்ற குழந்தைகளை அன்போடு கவனித்து வரும் அத்தனை பெற்றோருக்கும் என் அன்பும் வணக்கங்களும்.
அன்புடன்
மாலா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.