அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்து உள்ளது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், முக்கியமாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும், இதற்காக அதிமுகவில் கொண்டுவரப்பட்ட சட்ட விதி 20 முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இது மட்டுமல்லாமல் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றும், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இன்னும் 4 மாதத்தில் நடத்தி முடிப்பதற்கும், அதற்கான தேர்தல் பொறுப்பாளர்களையும் அறிவித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் அதிமுகவின் சிறப்பு பொதுக்குழு தீர்மானமாக கட்சியின் சட்ட விதிகளுக்கு முரண்பாகவும், கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, சிறப்பு பொதுகுழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வத்தின் அந்த பதவியை பறிக்கும் நடவடிக்கையாக, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை, அதிமுகவினர் நேரில் சந்தித்து அதற்கான கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகவும், புதிய எதிர்கட்சித் துணைத் தலைவரை பரிந்துரைப்பதற்கான மனுவினை கொடுக்க உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சில கொசுறு செய்திகள் :
அதிமுகவின் இந்த மோதல் காரணமாக, அதிமுகவின் தலைமையக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை வட்டாட்சியரால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் ராயபுரம் பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓ பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.