நியூயார்க் : ‘இந்தியா, 2023ல், மக்கள் தொகையில் சீனாவை விஞ்சி, உலகளவில் முதலிடத்தை பிடிக்கும்’ என, ஐ.நா., தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஐ.நா., ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 1950 முதல் உலக மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் குறைந்து, 2020ல் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக சரிவடைந்துள்ளது. வரும், நவ.,15ல் உலக மக்கள் தொகை, 800 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2030ல், 850 கோடியாகவும், 2050ல், 970 கோடியாகவும் உயரும். 2080ல், 1,040 கோடியாக அதிகரித்து, 2100 வரை அதே நிலையில் நீடிக்கும்.
தற்போது, சீனா மற்றும் இந்தியாவின் மக்கள் தொகை, முறையே, 142 கோடி மற்றும் 141 கோடியாக உள்ளது. இந்தியா, 2023ல் மக்கள் தொகையில் சீனாவை விஞ்சி உலகளவில் முதலிடத்தை பிடிக்கும். இந்திய மக்கள் தொகை, 2050ல், 167 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை, 132 கோடியாகவும் இருக்கும். கடந்த, 1990ல் உலக மக்களின் சராசரி ஆயுட்காலம், 63.8 ஆண்டுகளாக இருந்தது. இது, 2019ல், 72.8 ஆண்டுகளாக அதிகரித்தது. 2050ல் உலக மக்கள் சராசரியாக, 77 ஆண்டுகள் வாழ்வர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டின் சிறப்பு
இந்தாண்டு உலக மக்கள் தொகையில், 800 கோடியாக ஒரு குழந்தை இணைய உள்ளது சிறப்பு. இதையொட்டி அனைவரும் மனிதநேயம், சகோதரத்துவம், ஒற்றுமையை பேணிக் காக்க உறுதியேற்போம். மக்களின் ஆரோக்கியம், ஆயுட்காலம் அதிகரித்து வருவதும், குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதும் வரவேற்கத்தக்கது.
– அன்டோனியோ குட்டரஸ், ஐ.நா., பொதுச் செயலர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement