பெங்களூரு : ”நரேந்திர மோடி பிரதமரான பின், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. துரதிருஷ்டவசமாக இளைஞர் சக்தியை பயன்படுத்திக் கொள்ள பிரதமர் தவறி விட்டார்,” என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார்.கர்நாடக இளைஞர் காங்கிரஸ் சார்பில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று ‘யுவ கர்ஜனை’ என்ற நிகழ்ச்சி நடந்தது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா துவக்கி வைத்து பேசியதாவது:நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 107 கோடி பேருக்கு, வேலை செய்யும் பலம் உள்ளது. இதில், 30 வயதுக்குட்பட்ட 60 சதவீத இளைஞர்கள் உள்ளனர். ஆனால், 40 சதவீதத்துக்கும் குறைவானோருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்தியாவை தவிர, வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இளைஞர்கள் இல்லை. துரதிருஷ்டவசமாக இளைஞர் சக்தியை பயன்படுத்திக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தவறி விட்டார். நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நகர பகுதிகளில் 6 சதவீதமும்; கிராமிய பகுதிகளில் 9 சதவீதமும் வேலையில்லா திண்டாட்டம் காணப்படுகிறது.உலக பொருளாதார தர வரிசையில், 2011ல், மூன்றாம் இடத்தில் இருந்த இந்தியா, மோடி பிரதமரான பின், 164வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சாமியே தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் நான்கு ஆண்டுக்கு மட்டும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறார்களாம். அதன் பின் அவர்களின் கதி என்னவாகும்?சமீபத்தில் பெங்களூரு, மைசூரு வந்த மோடி, வேலை வாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை குறித்து பேசவில்லை. வேலை கேட்டால், பக்கோடா விற்கும்படி கூறுகிறார். மோடி, மோடி என்று கோஷம் எழுப்பும் இளைஞர்களே, உங்கள் வீட்டை அவர் பாழ் செய்துள்ளார். எதற்கு மோடி என்று கோஷம் எழுப்புகிறீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement