அதிமுக பொதுக்குழுவில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இ.பி.எஸ், கே.பி. முனுசாமிக்கு அதிகாரம் இல்லை. இ.பி.எஸ், கே.பி முனுசாமியை நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் மிகுந்த பரபரப்புக்கு இடையே சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் கொண்டுவரபட்டு நிறைவேற்றப்பட்டது. அதில், அதிமுக சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்ட, அதிமுக கலங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பி.எச். பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஓ. பன்னீர்செல்வம் அதிமுக பொதுகுழுவில் பங்கேற்காமல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கே ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, கார் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்களால் அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களமானது.
அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ், மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், பி.எச். பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்த், அதிமுக தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், “அதிமுகவில் இருந்து என்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும், கே.பி. முனுசாமிக்கு அதிகாரம் இல்லை. கட்சி விதிகளுக்கு மாறாக தீர்மானம் நிறைவேற்றிய எடபாடி பழனிசாமி, கே.பி. முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது: “எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன். என்னை நீக்குவதற்கு பழனிசாமிக்கோ, முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை.
கழக சட்டவிதிகளை மீறி தன்னிச்சையாக அறிவித்ததை நான் கண்டிக்கிறேன். அதிமுக சட்டவிதிப்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சட்டரீதியாக உரிய நீதியை பெறுவோம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“