புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜ உடன் சேர்ந்து முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியும், ஷிண்டேவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராகவும், ஷிண்டே தரப்பில் நிறுத்தப்பட்ட கொறடாவை ஆளுநர் அங்கீகரித்ததற்கு எதிராகவும் சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மூன்று மனுக்களையும் ஜூலை 11ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த இரு வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. ஆனால் நேற்று வழக்குகள் விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி ரமணாவிடம் முறையிட்ட போது, ‘‘அந்த வழக்குகளை விசாரிப்பதற்கான உரிய அமர்வை ஏற்படுத்த சிறிது காலம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு உடனடியாக விசாரிக்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் இருதரப்பு எம்எல்ஏக்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க கூடாது. இந்த உத்தரவு என்பது இந்த வழக்கில் விசாரணை நடத்தி முடிக்கும் வரை தொடரும்’’ என உத்தரவிட்டார்.