அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்து உள்ளது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், முக்கியமாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும், இதற்காக அதிமுகவில் கொண்டுவரப்பட்ட சட்ட விதி 20 முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இது மட்டுமல்லாமல் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றும், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இன்னும் 4 மாதத்தில் நடத்தி முடிப்பதற்கும், அதற்கான தேர்தல் பொறுப்பாளர்களையும் அறிவித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு, திமுகவின் கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஆர். ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“அதிமுக- வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றிருக்கின்ற எடப்பாடி கே.பழனிசாமிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்று ஈஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.