புதுடெல்லி: நாட்டின் எல்லையில் சீன ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எதுவும் பேசாமல் அமைதி காப்பது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டரில், “பிரதமர் பற்றிய சில உண்மைகள்: 1. சீனாவை கண்டு பயப்படுகிறார். 2. மக்களிடம் இருந்து உண்மையை மறைக்கிறார். 3. தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் பாதுகாத்து கொள்கிறார். 4. ராணுவத்தை குறைத்து மதிப்பிடுகிறார். 5. நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார். இந்திய எல்லைக்குள் சீனாவின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். இது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது,’’ என்று கூறியுள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் கோகாய், “பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளின் அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சீனாவின் அச்சுறுத்தல் குறித்து வெள்ளை அறிக்கை மூலம் தற்போதைய நிலவரத்தை விளக்க வேண்டும்,’’ என்றார்.