அதிமுக பொதுக்குழு கூட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி, சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு RFID தொழில்நுட்பத்துடன் அதிநவீன அடையாள அட்டை வழங்கப்பட்டது. போலி உறுப்பினர்களை தடுக்க நுழைவு வாயிலில்16 ஸ்கேனர்களுடன் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் நிகழ்ந்தது. இரு தரப்பினரும், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அங்கு பதற்றத்தை தணிக்க அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட மாவட்ட செயலாளர் வி.என்.ரவி. உள்பட இபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த பரப்பான சூழலில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றார்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்டு ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்துக்கு இபிஎஸ் வந்தார். அங்கு அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
கூட்டம் தொடங்கிய உடனேயே அதிமுகவில் இரட்டை தலைமை பதவியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பலரும் எதிர்பார்த்தது போல, அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்பட்டார்.
4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்கவும், தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி: மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும் என்ற பாடலை சுட்டிக்காட்டி, எடப்பாடிக்கு மாலைகள் விழும் என புகழ்ந்தார். இன்றைய இடைக்கால பொதுச்செயலாளர், நாளைய நிரந்தர பொதுச்செயலாளர் என சி. விஜயபாஸ்கர் இ.பி.எஸ்-ஐ பாராட்டினார்.
மேலும் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “ஒரு தலைமையை அடையாளம் காட்டும் நிகழ்வு இது. இபிஎஸ் கடுமையான உழைப்பின் அடையாளம், தடுமாறாத மன உறுதி கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர்.
இன்று ராமனாக அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்டும்போது லட்சுமணனை காணவில்லை என கலங்க வேண்டாம். ஒன்றரை கோடி தொண்டர்கள் லட்சுமணனாக நம்மிடத்திலே இருக்கிறார்கள். என்ன செய்வது கட்டபொம்மன் பிறந்த மண்ணிலே தான் எட்டப்பனும் பிறக்கிறான்” எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“