சென்னை: கரோனா வைரஸ் தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போதைய நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் 28 மெகா முகாம்களும், மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் 3 சிறப்பு மெகா முகாம்களும் நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் குறைந்திருந்த தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2,500-ஐ கடந்துள்ளது. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது.
95.23% பேருக்கு முதல் தவணை
தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 95.23 சதவீதத்தினருக்கு முதல் தவணையும், 87.25 சதவீதத்தினருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 17 வயதுடைய சிறார்களில் 30 லட்சத்து 23,682 (90.37 சதவீதம்) பேருக்கு முதல் தவணையும், 25 லட்சத்து 5,819 (74.89 சதவீதம்) பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதார, முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்களில் 18 லட்சத்து 5,929 (5.03 சதவீதம்) பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுடைய சிறார்களில் 18 லட்சத்து 94,484 (89.32 சதவீதம்) பேருக்கு முதல் தவணையும், 13 லட்சத்து 7,217 (61.63 சதவீதம்) பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நடந்த 31 மெகா முகாம்கள் மூலம் மட்டும் 4.61 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இந்தியா உட்பட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஒமைக்ரான் கரோனா வைரஸின் பிஏ4, பிஏ5 தொற்று பரவி வருகிறது. தொற்று பரவலின் வேகம் அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள் இல்லை. சில தினங்களில் தொற்றில் இருந்து குணமடைந்துவிடுகின்றனர்.
பூஸ்டர் தடுப்பூசி
தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்புடன் உள்ள சுமார் 20 ஆயிரம் பேரில் 5 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மீதமுள்ள 95 சதவீதத்தினர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஓராண்டை கடந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. அதனால் இரு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்கள் இலவசமாக அரசு மையங்களிலும், 18 முதல் 59 வயது வரையுள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர்.
முதல்வர் வேண்டுகோள்
முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவில், ‘‘நேற்று (ஜூலை 10) நடைபெற்ற கரோனா மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 17,55,364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கரோனா தாக்கம் இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.