உங்கள் படங்கள் ஒரே நாளில் இரண்டு வெளியாவதாலும், அடுத்தடுத்து வெளிவருவதாலும் தோல்விக்கான காரணமாகக் கருதுகிறீர்களா?
ஒரே நாளில் நான் நடித்த வெளியாவது இரண்டே இரண்டு முறைதான் நடந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு தீபாவளியன்று வெளியான ஐந்து படங்களில் நான் நடித்த இரண்டு படங்கள் மட்டும் வெற்றியடைந்தன. சமீபத்தில் தாய்க்கு ஒரு பிள்ளையும், ஆசீர்வாதமும் அடுத்தடுத்த வெளியாயிற்று. இன்னும் இரண்டு மாதங்களுக்கு நான் நடித்த படம் எதுவும் வருவதாகத் தெரியவில்லை. இதெல்லாம் டிஸ்டிரிபியூட்டர்களின் பிரச்னை. எனக்கு நடிப்பைப் பற்றிய பிரச்னையுடன் வேலை முடிந்தது!
திரைப்படத்துறைக்கு வந்ததற்காக நீங்கள் எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?
“நோ. பொதுமக்களின் மத்தியில் எனக்கு ஏற்பட்டிருக்கும் புகழைக் கண்டு பெருமையுடன் சந்தோஷப்படுகிறேன். ஆனால் அதே நேரம் விளையாட்டு, பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த முடியாதது சமயத்தில் கஷ்டமாகத்தான் இருக்கிறது. தொழில்தான் முக்கியம்!
முன்பு சிவாஜி, எம். ஜி. ஆருடன் சில படங்களில் சேர்ந்து நடித்ததுபோல இப்போது ஏன் நடிப்பதில்லை?
‘கால்ஷீட்’ தான்! சில சமயங்களில் கதாநாயகனின் தம்பி, பிள்ளை போன்ற வேடங்களுக்காகத் தயாரிப்பாளர்கள் என்னை அணுகும்போதே நான் இப்பிரச்னை பற்றித் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். இருவருக்கும் ஒத்துவரின் நான் நடிக்கத் தவறுவதில்லை!
உங்கள் படங்களில் இந்தக் கதாநாயகியைத்தான் போடவேண்டும் என்று தயாரிப்பாளருக்கு யோசனை கூறுவது உண்டா?
சாதாரணமாக நான் இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை! இருப்பினும் இந்த நடிகையைப் போட்டால் வேடப்பொருத்தம் நன்றாக இருக்கும் என்று பட முதலாளியிடம் கூறுவதுடன் சரி. ஆனால் நான் சொல்வதைச் செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை!
டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்று சமீபத்தில் ஒரு பிரச்னை கிளம்பியிருக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
படம் ஆரம்பமாவதற்கு முன்னாலேயே முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது. பின்னால் பிரச்னையாக்கக் கூடாது. ‘ஆசீர்வாதம்’ படத்தில் என்னுடன் திரு. எஸ். வி. சுப்பையாவும் நடித்திருக்கிறார். திரு. சுப்பையா ஒரு பெரிய குணச்சித்திர நடிகர். அப்படிப்பட்டவர் எனக்குப் பின்னால் தனது பெயர் காட்டப்பட்டதை மறுக்கவில்லை. பிரச்னையாக்கவும் விடவில்லை! திரு. சுப்பையாவை விடத்திறமையான நடிகர் நடிப்புத் துறையில் கம்மிதான். ஒரு படத்தில் கதாநாயகனின் பெயரைக் காட்டுவது மக்களிடையே ஒரு சென்ஸேஷனை ஏற்படுத்துவதற்காகத் தான்! நான் எம். ஜி. ஆருடனோ, சிவாஜியுடனோ நடித்தால் அவர்கள் பெயர் தான் முதலில் வரவேண்டும்! ஏனெனில் அது அவர்கள் படம்! அனுபவ நடிகர் என்பதற்காக தந்தையாகவோ வேறு ஏதாவது ஒரு வேடத்திலோ நடிப்பவர்கள் தங்கள் புகழைத்தான் எதிர்பார்க்க வேண்டுமே ஒழிய டைட்டிலை அல்ல!
நீங்கள் ஏ. வி. எம். ராஜன், ரவிச்சந்திரன் முதலிய மூவரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் கதாநாயகர்களாக அறிமுகமானது போல, இப்போது புதிய இளம் தலைமுறையினர் யாரையும் படவுலகில் பார்க்க முடியவில்லையே? ஏன்?
பட முதலாளிகளுக்குத் தைரியமில்லாதது தான் காரணம். கலையென்றும், புரட்சியென்றும் உதட்டளவில்தான் எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் படமெடுக்கும் போது பயம் வந்து விடுகிறது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது எப்போதுமே எதிர்பார்க்க வேண்டிய விஷயம்தான். திரு. ஜோசப் தளியத் தன்னை அதிக விளம்பரம் செய்து கொள்ளாமல் படத்தில் என்னைப் பிரபலப்படுத்தி அறிமுகப்படுத்தினார். அதைப் போல பேசாமல் சாதனை செய்பவர்கள் இண்டஸ்ட்ரியில் மிகக் குறைவு!
பேட்டி. ராஜன்