வானகரத்தில் பொதுக்குழு கூடிவரும் நிலையில், மறுபுறம் ஓ.பி.எஸ் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தடைகளை உடைத்து உள்ளே நுழைந்தார். அப்போது, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால், அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களமானது. அங்கே நடைபெற்ற கல்வீச்சு, கார்கள் உடைப்பு சம்பவங்களால் அதிமுக தலைமை அலுவலகம் கலவரமயமானது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், காலை 8.30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருதரப்பு ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருதரப்பு ஆதரவாளர்களும் கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும், அதிமுக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி படங்கள் இருந்த பதாகைகளுக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தீ வைத்து இ.பி.எஸ்-க்கு எதிராக கோஷமிட்டனர். கல்வீச்சு சம்பவத்தில் இதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இ.பி.எஸ் ஆதரவாளர்கள் பின்வாங்கியதை அடுத்து, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திகுற்குள் நுழைந்தனர். தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் அங்கே இருக்கிறார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டதால் அதிமுக தலைமை அலுவலகம் கலவரமயமானது. அங்கே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மோதலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து, அதிமுக அலுவலகத்தில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, அதிரடிப்படி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். அதே போல, இ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் காலை 9.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”