கொழும்பு,
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் பலர் தற்போது அங்கேயே தங்கியுள்ளனர்.
இதனைதொடர்ந்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். மேலும் கொழும்பு ரத்மலானை விமானப்படை தளத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ம் தேதி பதவி விலகினால், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கையின் அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கொண்டுவந்துள்ளார், அதனை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தி உள்ளார்.
பாராளுமன்றத்தில் சமகி ஜன பலவேகயா கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் தேர்வு தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற சஜித் பிரேமதாசாவுக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.
இதனிடையே, தாய்நாட்டை பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது, வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்டவற்றை தவிர மாற்றுத் தீர்வு எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.