புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப். அமைப்பு தனது சந்தாதாரர்களில் ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
பி.எப் ஓய்வூதியத்தை மத்திய தொகுப்பு மூலம் ஒரே நேரத்தில் அனைத்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் விதமான நடவடிக்கை எடுக்க 29 மற்றும் 30-ம் தேதிகளில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
தற்போது 138 மண்டல பிஎப் அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவை மண்டல வாரியாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு பகுதியில் இருப்பவர்களுக்கும் வெவ்வேறு நாட்களில் ஓய்வூதியம் கிடைக்கிறது.
தற்போது 138 மண்டல அலுவலகங்களில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 73 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே நாளில் மத்திய தொகுப்பு மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய தொகுப்பின் தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி ஒரே நபரின் பெயரில் உள்ள பல்வேறு பிஎப் கணக்குகள் ஒன்றிணைக்கப்படும். பணி மாறுதலுக்குரிய படிவங்களை விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
இதேபோல 6 மாதத்துக்கும் குறைவாக ஓய்வூதிய பங்களிப்பை அளித்துள்ள சந்தாதாரர் அவரது கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 6 மாதம் முதல் 10 ஆண்டு வரையான காலத்திற்கு சந்தா செலுத்தியவர்களுக்கு மட்டுமே இத்தகைய வசதி அளிக்கப்பட்டுள்ளது.