அதிமுக-வில் அரங்கேறிய முக்கோண காட்சிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?

அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 11) தொடங்கியதும் அதிமுகவில் இதுவரை இருந்த இரட்டைத் தலைமை ரத்து செய்யப்பட்டது, இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு அதிமுக செயற்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் பொதுக்குழுவிலும் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக பொதுக்குழு

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை பொதுக்குழுவைத் தலைமை தாங்கி நடத்தித் தருமாறு எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். அதை கே.பி. முனுசாமி வழிமொழிந்தார். இதனையடுத்து செயற்குழுவில் கொண்டுவரப்பட்ட 16 தீர்மானங்களையும், அதோடு தற்போது கழகத்தின் நிலை குறித்து விவாதித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன் மொழிந்தார். அந்தத் தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார். பின் முக்கிய தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார்.

இந்த நிகழ்வு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் ஓ.பன்னீர் செல்வம் தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். ஓபிஎஸ் வருகிறார் என்று தகவல் கிடைத்ததும் இபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தைப் பூட்டியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே கட்டை, கம்பு கத்தியுடன் கடுமையான மோதலும் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கல்வீச்சு தாக்குதலும் நடந்துள்ளது.

அதிமுக தலைமை கழக அலுவலகம்

இதற்கு முன்னதாக சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 7, 8 ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு காரசாரமான வாதங்களை முன் வைத்தனர். யாரும் எதிர்பாராத வகையில் ஜூலை 8 ஆம் தேதி மாலை இரு தரப்பு வாதங்களும் முடிந்த பின் தீர்ப்பை நேற்று, அதாவது ஜூலை 11 காலை 9 மணிக்குத் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார். பொதுக்குழு கூடும் ஜூலை 11 ஆம் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பு என அறிவித்ததன் மூலம் தங்களது மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லாமல் போனதாக ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் வேதனையுடன் நீதிமன்ற வளாகத்திலேயே முணுமுணுத்தனர்.

இது தொடர்பாக வெள்ளி இரவே அவர்கள் தலைமை நீதிபதியை அணுக முயன்றதாகத் தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகியிருக்கும் நிலையில் இன்று காலை 8.35 மணிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நீதிமன்றத்துக்கு வந்தார். சரியாக 9 மணிக்குத் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார், அப்போது அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை இல்லை என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

சசிகலா – எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம்

இவ்வாறாக இபிஎஸ், ஓபிஎஸ், நீதிமன்ற தீர்ப்பு… என்று முக்கோண காட்சிகளை சந்தித்திருக்கும் அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வுகள், வருங்காலம் என்னவாக இருக்கும் என்பதுதான் இப்போது அரசியல் பார்வையாளர்களிடையே பேசு பொருளாக மாறி இருக்கிறது.

“ஓ.பி.எஸ்-க்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதை இது நிரூபித்துள்ளது” என்கிறவர்கள், “இதற்கான முடிவு சொல்ல வேண்டியது தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள். அதுவரை அதிமுக-வின் ஒற்றைத் தலைமை என்பது இரட்டை இலைதான்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பொதுவாக எந்த கட்சியின் தாவா-வாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்திற்குத்தான் முதலில் செல்லும். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த தாவா நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது. எவ்வளவு தான் விதிகள் திருத்தினாலும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் தர வேண்டும். ஒப்புதல் தருவதற்கு முன் மனுக்கள் போடப்படும். இதன் அடிப்படையில்தான் அதிமுக பொதுக்குழுவில், விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்திருக்கிறார் இபிஎஸ். கட்சிக்குள் இபிஎஸ், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா என பல்வேறுவிதமான குழப்பங்கள் நீடித்து வரும் வேலையில், சின்னத்தை முடக்குவதோ அல்லது கட்சி அலுவலகத்தை கை பற்றுவதோ தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பொறுத்தே ஒருவருக்கு உறுதி செய்யப்படும். எனவே தங்கள் பக்கம் சட்ட நடவடிக்கைகள் எளிதில் மேற்கொள்ள முடியும் என்கிற நடவடிக்கையில் இவ்வளவு விரைவாக இபிஎஸ் பொதுக்குழு முடிவுகளைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இதனையடுத்து பொதுக்குழு கூட்டம் சட்ட விதிப்படி நடக்கவில்லை என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸும் பதில் மனு அளித்திருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் – மோடி – எடப்பாடி பழனிசாமி

“அதிமுக விவகாரத்தைப் பொறுத்தவரை இறுதி முடிவு பாஜக-வின் கையில்தான் இருக்கிறது” என்கிறார்கள் அதிமுக உள்விவகாரங்களைக் கவனித்து வருபவர்கள். மேலும் தொடரும் போது, “தேர்தல் ஆணையம் அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை எப்போதும் மத்தியில் ஆளும் கட்சிகளுக்கு இணங்கி தான் சில முடிவுகளை எடுத்திருக்கிறது. அப்படியான ஒரு முடிவுதான் இப்போதும் எடுக்கப்படும். இதை வைத்து யாருக்கு பா.ஜ.க ஆதரவு இருக்கிறது என்பதை யூகித்துவிடலாம். இது இறுதி வெற்றி அல்ல. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.