டெல்லியில் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் டெல்லி மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
வடமாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தும் காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த மாதமே பருவமழை தொடங்கி விட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தாலும் பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென டெல்லி மற்றும் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று காலை முதல் டெல்லியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக வடக்கு டெல்லியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் காலையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சுரங்கப் பாதைகள் மற்றும் சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை ஒழுங்கு படுத்துவதற்காக டெல்லி காவல்துறை சமூக வலைதளங்களில் மாற்றம் செய்யப்பட்ட சாலைகள் குறித்த விவரங்களையும் வெளியிட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், வட கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தலைநகர் டெல்லியிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் பருவமழை தீவிரம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM