இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்துவருகிறது. அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை, கொழும்பில் எதிர்க்கட்சிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எனப் பலர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மதியம் அதிபர் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தகவலைப் பொய் என நிராகரித்தனர். மேலும், அதிபர் ராணுவத்தின் பலமான கட்டுப்பாட்டில் விமான நிலையம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தற்போது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 எனத் தேதி குறிப்பிட்டுக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த ராஜினாமா கடிதத்தை இலங்கை அரசின் சிறப்பு அதிகாரி ஒருவரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அதைச் சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், நாளை சபாநாயகர் பகிரங்கமாக இலங்கை நாட்டு மக்களுக்கு கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடித்ததை அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.