வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு : இலங்கையில் இருந்து துபாய் தப்பி செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சேவுக்கு குடியேற்றத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காததால், அவர் திரும்பி சென்றார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சராக இருந்த, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர்.அவர்களின் மற்றொரு சகோதரரான அதிபர் கோத்தபயா ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதால், அவர் அங்கிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடத்தில் தங்கி உள்ளார். அவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாக இலங்கை சபாநாயகர் அபேவர்தனா யாபா பேட்டி அளித்திருந்தார். ஆனால், தவறுதலாக அவர் கூறிவிட்டதாகவும், கோத்தபயா இலங்கையில் பாதுகாப்புடன் தங்கி உள்ளதாக கூறியுள்ளார். அவர் 13ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். இதனிடையே, கோத்தபயா முன்தேதியிட்டு ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பசில் ராஜபக்சே துபாய் செல்வதற்காக கொழும்பு விமான நிலையம் வந்துள்ளார். அங்கு இருந்த பொது மக்கள் சிலர், பசிலை அடையாளம் கண்டு கொண்டு, வெளியேற எதிர்ப்பு தெரிவித்தனர். குடியேற்றத்துறை அதிகாரிகளும், பசில் ராஜபக்சே வெளியேற அனுமதிக்கவில்லை. இதனையடுத்து அவர் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement