புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில், 19.6 அடி உயரம், 9,500 கிலோ எடை உள்ள வெண்கலத்தாலான இந்திய அரசின் தேசிய சின்னத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
வரும் 18ல் துவங்க இருக்கும் மழைக்கால கூட்டத்தொடர், தற்போதைய பார்லி., கட்டடத்தில் நடக்கும் கடைசித் தொடராக இருக்கப்போகிறது. காரணம், தற்போதுள்ள கட்டடத்திற்கு அருகிலேயே, மொத்தம் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில், புதிய பார்லி., கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இங்கு, வரும் நவம்பரில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், புதிய பார்லிமென்டின் உச்சியில், அசோக சக்கர பீடத்தில், நான்கு சிங்கங்கள் நிற்கும் இந்திய அரசின் தேசிய சின்னத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
வெண்கலத்தால் ஆன இந்த சின்னத்தை உருவாக்கும் பணிகள், கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்று வந்தன. 19.6 அடி உயரமும், 9,500 கிலோ எடையும் உள்ள இந்த சின்னத்தின் கீழ் உள்ள பீடத்தின் எடை மட்டுமே 6,500 கிலோ.பீடத்தை உருவாக்கிய பின், இந்த சின்னத்தை அப்படியே உச்சிக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதால், அவை மொத்தம், 150 பகுதிகளாக பிரிக்கப்பட்டன.இவற்றை உச்சிக்கு எடுத்துச் சென்று பொருத்தும் பணிகள், கடந்த ஏப்ரலில் துவங்கி சமீபத்தில் முடிவுக்கு வந்தன.
இதையடுத்து, இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டவுடன், சின்னத்தை திறந்த வைத்த பிரதமர் மோடி, அதன் பீடத்தில் இருந்த அசோக சக்கரத்திற்கு குங்குமம் வைத்து, பய பக்தியுடன் தொட்டு வணங்கினார்.இந்த விழாவில், பார்லி., கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிருங்கேரி சங்கர மட அர்ச்சகர்
இந்த பூஜையை சிருங்கேரி சங்கர மடத்தின் டெல்லி கிளையின் அர்ச்சகர் நாகராஜா அடிகா மற்றும் ரிஷய சிருங்க பட் நடத்தி வைத்தனர். பூஜைக்காக சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ ஶ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் அனுப்பி வைத்த பிரசாதம் , வழங்கி பொன்னாடை பிரதமருக்கு அளிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்