சித்தூரில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ஏரியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றிய என்சிசி மாணவர்கள்-மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

சித்தூர் : சித்தூரில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், ஏரியில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை என்சிசி மாணவர்கள் அகற்றினர். இந்த பணியை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சித்தூரில் நேற்று சித்தூர் கட்ட மஞ்சு ஏரியை என்சிசி மாணவர்கள் சார்பில் சுத்தம் செய்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி ஆணையர் அருணா தலைமை தாங்கி, கொடி அசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது கர்ணல் அஜய், லெப்டினன்ட் கர்ணல் ரங்கநாதன், என்சிசி மாஸ்டர் பிரசாத்ரெட்டி உள்பட ஏராளமான ராணுவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.தூய்மை பணிகள் முடிந்த பிறகு கர்ணல் அஜய் பஸ் நெட் பேசியதாவது: ஆந்திர மாநில 35வது என்சிசி பட்டாலியன் சார்பில், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், என்சிசி மாணவர்கள் மூலம் கட்டமஞ்சு  ஏரி தூய்மைப்படுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்பேரில், இந்தியா முழுவதும் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் அனைத்து நகரங்களிலும் என்சிசி மாணவர்கள் சார்பில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சித்தூர் மாநகரத்தில் கட்ட மஞ்சு ஏரியை தூய்மைப்படுத்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கட்டம்பஞ்சு ஏரி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அசுத்தமாக இருந்த அனைத்தும் அகற்றப்பட்டது. தற்போது கட்டமஞ்சு ஏரி பார்ப்பதற்கு மிகவும் சுத்தமாகவும் தூய்மையாகவும் உள்ளது. இதேபோல் சித்தூர் மாநகரத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் என்சிசி மாணவர்கள் சார்பில் தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.பொதுமக்களும் பிளாஸ்டிக் வகையான கழிவு பொருட்களை பயன்படுத்தக்கூடாது என என்சிசி மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். ஏராளமான பொதுமக்கள் பிளாஸ்டிக் கவர்களை கழிவுநீர் கால்வாயில் வீசிவிடுகிறார்கள். ஏரி அருகேயும் வீசி விடுகிறார்கள். அதேபோல் ஏராளமான குடிமகன்கள் ஏரி அருகே குடித்துவிட்டு காலி மதுபாட்டில்களை வீசிவிட்டு செல்கிறார்கள். தற்போது இந்த ஏரியில் பல டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை அகற்றி சேகரித்துள்ளோம். இனியாவது பொதுமக்கள் யாரும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்த வேண்டாம். அதேபோல் அவர்கள் வீசும் கழிவுகளை குப்பை தொட்டியிலேயே வீச வேண்டும். பொது இடங்களில் யாரும் வீசக்கூடாது என தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.ராணுவத்துக்கு இணையாக என்சிசி மாணவர்களுக்கு பயிற்சிநிகழ்ச்சியில் கர்ணல் அஜய் பஸ் நெட் பேசுகையில், ‘ராணுவத்தில் எவ்வாறு பயிற்சி வழங்குகிறோமோ, அவர்களுக்கு இணையாக என்சிசி மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கி வருகிறோம். என்சிசி மாணவர்களுக்கு அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு, அதிகாரிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் பயிற்சி வழங்குகிறோம். அதேபோல் அவர்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் நாங்கள் பயிற்சி வழங்கி வருகிறோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.