மத்தியப் பிரதேசத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை விழுங்கியதாகக் கூறி ராட்சத முதலையைப் பிடித்து கிராம மக்கள் கட்டிப் போட்டனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஷியோபூரில் உள்ள ஒரு ஆற்றில் நேற்று (திங்கட்கிழமை) காலை, 10 வயது சிறுவன் ஒருவன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது ஆற்றில் மறைந்திருந்த ஒரு முதலை அச்சிறுவனை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த சிறுவனை முதலை அப்படியே விழுங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தகவலறிந்து வந்த சிறுவனின் குடும்பத்தினரும் கிராம மக்களும் தடிகள், கயிற்றைக் கொண்டு முதலையை பிடித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் முதலையைக் காக்கும் சிறப்புக் குழுவும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்தனர்.
இரு குழுக்களும் கிராம மக்களின் பிடியில் இருந்து முதலையை மீட்க முயன்றனர். மாலை வரை சிறுவனின் குடும்பத்தினர் முதலையை விடுவிக்கச் சம்மதிக்கவில்லை. வயிற்றை கிழித்து சிறுவனை மீட்கும் வரை முதலையை விடமாட்டோம் என்ற அடம்பிடித்த மக்களிடம் போலீசார் சமசர பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் முதலையை மீட்டுச் சென்றனர். பொதுவாக முதலையின் உணவுப்பட்டியலில் மனிதன் இல்லாத நிலையில், சிறுவனை விழுங்கியதாக கூறப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாம்: மழையில் நனைந்த குட்டியை பாதுகாக்க தாய் யானை பாசப் போராட்டம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM