செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில்  மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து, நிவரணப் பணிகளை துரிதப்படுத்தி, வரும் பருவ மழை காலங்களில் மக்களுக்கு மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி தமிழகமெங்கும் வெள்ளத் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. செம்மஞ்சேரி மற்றும் டி.எல்.எப். வளாகம் ஆகிய பகுதிகள் கடந்த பருவமழையின் போது வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட  அப்பகுதிகளுக்கு வெள்ளப் பாதிப்பிலிருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில், திட்டங்கள் தீட்டப்பட்டு வெள்ளத்  தடுப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மாவட்டம் – சோழிங்கநல்லூர் வட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் – தாம்பரம் வட்டம், பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கால்வாய்க்கு இருபுறமும் 24 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தாங்கு சுவர் கட்டும் பணியில், நூக்கம்பாளையம் மேம்பாலத்தில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது இவ்வெள்ளத் தடுப்புப் பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். பின்னர், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசன்கழனி வேலன்தாங்கல் ஏரி முதல் கழுவெளி வரை மூடுதளத்துடன் கூடிய பெருவடிகால் கால்வாய் கட்டும் பணியில், அரசன்கழனி ஏரியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்தில் 21 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுரப்பாக்கம் ஓடையில் இருந்து டி.எல்.எப். வளாக சாலையில் 500 மீட்டர் வரை அவசரக்கால வெள்ளநீர் கடத்தும் பெருவடிகால் அமைக்கும் பணியில், மதுரப்பாக்கம் ஓடை, தெற்கு டி.எல்.எப். பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, இப்பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சு.முத்துசாமி, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் திரு. அரவிந்த் ரமேஷ், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் திரு. கே.வீர ராகவ ராவ், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ம.கோவிந்த ராவ், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஆ.ர.ராகுல்நாத், இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் திரு. முரளிதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.