மதுரை மாநகராட்சி, கருப்பாயூரணியை சேர்ந்தவர் பாலகுமரன். இவர் கடந்த 8 ஆண்டுகளாக தேசிய-மாநில அளவில் நடக்கும் பாக்சிங், கிக் பாக்சிங், டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார்.
இந்த நிலையில், இந்தோனேசியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பாலகுமரன் பங்கேற்க உள்ளார். ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பாலமுருகன் பங்கேற்பது மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இது குறித்து பாலகுமரன் தெரிவித்துள்ளதாவது,
“தேசிய அளவிலான பாக்சிங், கிக் பாக்சிங், போன்ற போட்டிகளில் பங்கேற்று பல முறை விருதுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளேன். இதனைப் போன்று தேசிய டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளேன்.
இதனை தொடர்ந்து, கேரளாவில் ஆசிய குத்துசண்டை போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்று அடுத்த மாதம் இந்தோனேசியாவில் நடக்கவுள்ள ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளேன்.
இதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறேன். ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது லட்சியம்”. என்று பாலமுருகன் தெரிவித்துள்ளார்.