மைசூரு : அரண்மனை நகரான மைசூரின் மண்டகள்ளி விமான நிலையத்தை, ஆண்டுதோறும் 2 லட்சம் பயணியர் பயன்படுத்துகின்றனர். இந்த விமான நிலையத்தை, சர்வதேச தரத்துக்கு உயர்த்த ஏற்பாடு நடக்கிறது.மைசூரு நகரின், மைசூரு — நஞ்சன்கூடு நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மண்டகள்ளி, சில ஆண்டுகளுக்கு முன் மாடுகள் மேய்க்கும் இடமாக இருந்தது. இந்த இடத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது.
இப்போது மிகவும் பரபரப்புடன் இயங்கும், நாட்டின் சிறிய விமான நிலையங்களில், இதுவும் ஒன்றாக உள்ளது.மைசூரில் பல்வேறு மண்டலங்கள் உருவாகிறது. சரியான தொடர்பு வசதி இல்லாததால் பிரச்னை ஏற்பட்டது. பெங்களூரு — மைசூரு பத்து வழி நெடுஞ்சாலை திட்டம், முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில் இணைப்பு ஏற்படுத்திய பின், இந்த விமான நிலையமும் அபிவிருத்தி அடைகிறது.தற்போது மைசூரின், சுற்றுப்புறத்தின் ஏழு முக்கியமான நகரங்களுக்கு, விமான இணைப்பு உள்ளது. தினமும் 14 முறை விமானங்கள் பறக்கின்றன. மார்ச்சில் 14 ஆயிரத்து 519; ஏப்ரலில் 15 ஆயிரத்து 17; மே மாதம் 16 ஆயிரத்து 937; ஜூனில் 16 ஆயிரத்து 278 பேர் இந்த நிலையத்தை பயன்படுத்தினர்.
மேலும் பல நகரங்களுக்கு, இங்கிருந்து விமானம் இயக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக, விமான சேவை நிறுவனங்களுடன், பேச்சு நடக்கிறது.தற்போது மைசூரு விமான நிலையத்தின் ரன்வே 1,740 மீட்டராக உள்ளது. சிறிய விமானங்களை மட்டும் இயக்க முடியும். டில்லி, கோல்கட்டா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும், இங்கிருந்து விமான போக்குவரத்து வசதி செய்ய வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால், ரன்வே சிறிதாக இருப்பதால், ஏர் பஸ், போயிங் போன்ற பெரிய விமானங்கள் தரையிறங்க முடியாது.இதை மனதில் கொண்டு, மண்டகள்ளி விமான நிலையம் ரன்வேயை, 2,750 மீட்டராக விஸ்தரிக்க, ஏற்பாடுகள் நடக்கின்றன. மைசூரு பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹா, விமான நிலைய ஆணைய இயக்குனர் மஞ்சுநாத் உட்பட பலரது முயற்சியின் பலனாக, இந்த விமான நிலையம், சர்வதேச தரத்துக்கு உயர்கிறது. இதற்கு மத்திய அரசின் ‘உடான்’ திட்டம், பெரிதும் பயன்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement