‘இப்படியெல்லாமா தலைப்பு வைப்பீங்க!’ – ‘கோப்ரா’ விழாவில் பங்கமாய் கலாய்த்த விக்ரம்!

தனது உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளை பற்றி மீடியா மற்றும் யூட்யூப்பர்ஸ் வெளியிட்ட செய்திகளை, நடிகர் விக்ரம் ‘கோப்ரா’ இசை வெளியீட்டு விழாவில் பங்கமாய் கலாய்த்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி ஸ்கொயர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களிடையே பெறவில்லை. அதன்பிறகு இவரது நடிப்பில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக வேறு எந்தப் படமும் திரையரங்குகளில் வெளியாகநிலையில், ‘மகான்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடியில் வெளியானது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பின் விக்ரம் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜய் ஞானமுத்து அடுத்ததாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘கே.ஜி.எஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் விக்ரம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீநிதி ஷெட்டி, துருவ் விக்ரம், மிருணாளினி, ரோஷன் மேத்திவ், இர்ஃபான் பதான், ரோபோ ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த் ராஜ், பாடலாசிரியர் தாமரை, இயக்குநர் அஜய் ஞானமுத்து, உதயநிதி எனப் பலரும் கலந்து கொண்டனர்.

image

பாடலாசிரியர் தாமரை இந்தப் படம் குறித்து பேசும்போது, “இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் உயிர் உருகுதே ஏற்கனவே வெளியாகிவிட்டது. இன்னொன்று ‘தரங்கினி’ என்ற பாடல். இந்த வருடத்தில் பெரிய ஹிட் பாடலாக அது அமையும்” என்று கூறினார்.

நடிகர் ஆனந்த் ராஜ் பேசுகையில், “தன்னை வருத்தி கொண்டு நடிக்கும் கலைஞன் விக்ரம். நடிப்புக்கு ஒரு டிக்ஸ்னரி கமல் சார். அதே போல் இன்னொரு டிக்ஸ்னரி விக்ரம்” என்று தெரிவித்தார்.

‘கே.ஜி.எஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி கூறுகையில், “இந்தப் படத்தின் ரிலீஸ் வேலைகள் துவங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் ரஹ்மானின் இசையில் நடிப்பது, ஒரு ரசிகையாக அவரின் பாடல்கள் கேட்டு, இன்று அவர் இசையமைக்கும் படத்தில் இருப்பது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

image

முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் விரர் இர்ஃபான் பதான் பேசுகையில், “விக்ரம் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் ரசிகன் நான். விக்ரமின் ‘அந்நியன்’ படம் மிகப் பிடிக்கும். இன்று அவர்களின் படத்தில் நானும் பங்கு பெறுவது மகிழ்ச்சி” என்று கூறினார்.

ரோஷன் மேத்திவ் கூறுகையில், “நான் பிரம்மித்து பார்த்தவர்களுடன் ஒரே நிகழ்வில் கலந்து கொள்வதே மகிழ்ச்சி. அவர்களுடன் படமும் செய்திருக்கிறேன் என்பது இன்னும் பெரிய விஷயம்” என்று தெரிவித்தார்.

கே.எஸ்.ரவிக்குமார் “விக்ரமுடைய ரசிகன் நான். அவருடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் அவருக்கு என்னுடன் இது இரண்டாவது படம், ‘அருள்’ படத்தில் இணைந்து நடித்தோம். இப்போது ‘கோப்ரா’ ” என்று கூறினார்.

துருவ் விக்ரம் தெரிவிக்கையில், “அப்பா எனக்காக எப்போதும் இருந்திருக்கிறார். ஒரு மகனாக மற்றும் ஒரு ரசிகனாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பினேன்” என்று தெரிவித்தார்.

image

செவன் ஸ்க்ரீன்ஸ் தயாரிப்பாளர் லலித் குமார் பேசும்போது, “இந்தப் படத்துக்கான எல்லாமும் மிக அழகாக அமைந்தது, விக்ரம் சார், ரஹ்மான் சார், இர்ஃபான் பதான் எனப் பலரும் படத்தை பிரம்மாண்டமாக மாற்றினார்கள். விக்ரம் சாருக்கு ஒரு ‘அந்நியன்’, ‘ஐ’ போல பெரிய ஹிட்டாகும்” என்றார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில், “ ‘இமைக்கா நொடிகள்’ ரிலீஸூக்கு முன்பே இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது. படத்தில் இருக்கும் அத்தனை பேரும் சேர்ந்து என்னுடைய பொறுப்பை அதிகமாக்கிவிட்டார்கள். ரஹ்மான் சாருக்கு கதை சொல்லப் போனதெல்லாம் தனி அனுபவம். கதை சொல்ல தயாரிப்போடு வரவே இல்லை, அவரை சந்தித்து ஃபோட்டோ எடுத்துவிட்டு வரலாம் என்றுதான் சென்றேன். அவர் என்னுடைய படத்திற்கு இசையமைப்பது பெருமை. விக்ரம் சார் படம் இயக்க கிடைத்த வாய்ப்பு என் வாழ்வில் மிகப்பெரிய வரம்” என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “’மாஸ்டர்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்கள் மாதிரி இந்த ‘கோப்ரா’வும் தயாரிப்பாளருக்கு பெரிய வெற்றியைத் தரும். விக்ரம் சார், ரஹ்மான் சார் பின்னால் இருந்து ரசிகர்கள் சொல்வதைத் தான் நானும் சொல்கிறேன். ஐ லவ் யூ விக்ரம் சார், ஐ லவ் யூ ரஹ்மான் சார்.” என்று தெரிவித்தார்.

ரஹ்மான் பேசுகையில், “என்னுடைய டீமிற்கு நன்றி. கொரோனா எனும் சவாலுடன் இந்தப் படத்தை செய்திருக்கிறோம். ‘ரோபோ’ படத்தில் எல்லா சின்ன ரோபோவும் சேர்ந்து பெரிய ரோபோ ஆகும். அதில் ஒவ்வொரு சின்ன ரோபோ போன்றவர்கள் என்னுடைய டீம். ‘கோப்ரா’ பெரிய வெற்றியடையும்” என்று கூறினார்.

image

கடைசியாக விக்ரம் பேசுகையில் நெஞ்சில் கையை வைத்து, “ஐயோ கைய இங்க வெச்சிட்டேனா… வைத்திருக்கக் கூடாது. பிறகு ஹார்ட் அட்டாக் என சொல்லிவிடுவார்கள். அது போல நிறைய செய்திகள் வந்தது. ஃபோட்டோ ஷாப் எல்லாம் செய்து சிலர் தம்ப்நெயில் வைத்தார்கள். ஆனால் எனக்கு ஆதரவாக குடும்பம், ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் என்னால் இதைக் கடந்து வர முடியும். சினிமாவுக்காகவே வாழ்ந்திருக்கிறேன். ரொம்ப வருடம் முன்பு சோழா டீ விளம்பரத்தில் நடித்தேன்.

இன்று அதே ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கிறேன், என்னுடைய மனதுக்கு நெருக்கமான மணிரத்னம் இயக்கத்தில். ஒரு லட்சியம் இருந்தால் நாம் நினைத்த இடத்திற்கு செல்வோம் என்பதற்கு இது ஒரு உதாரணம். ‘கோப்ரா’ படம் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படம் எனக்கு கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. வழக்கமாக டப்பிங்கில் நான் அசத்திவிடுவேன். ஆனால் இந்தப் படம் சிரமமாக இருந்தது. இதில் ஏழு விதமான குரலில் பேசியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.