மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலையில் அருகருகே இரண்டு தனியார் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக மாநகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வைத்து கஞ்சா பொட்டலங்களை மாணவர்களக்கு விற்பனை செய்வதாகவும் மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர்.
மதுரை ஜம்புராபுரம் மார்க்கெட் பகுதியில் மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் வாயிலாக (ஆன்லைனில்) கஞ்சா பொட்டலங்களை சக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தபோது போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில்ள் இன்ஸ்டாகிராம் மூலம் சக மாணவர்களுக்கு கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக போட்டு 50 ரூபாய், 100 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. அத்துடன் கஞ்சா விற்கும் பகுதியை லோகேஷன் ஷேர் செய்து விற்பனை செய்த கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த கிஷோர், தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன், சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் மாணவர்களிடமிருந்து, போலீசார் ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனம், 3 செல்ஃபோன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். போலீசில் பிடிபட்ட மூன்று மாணவர்களும் கல்லூரி இறுதியாண்டு, இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சக மாணவர்களுக்கு இன்ஸ்டா, ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்வதால் எளிதில் போன் நம்பர் யாருக்கும் தெரியாது, எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இவ்வாறு விற்பனை செய்வதாக விசாரணையில் தெரிவித்தனர்.
செய்தியாளர் – கணேஷ்குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM