மழையில் ரசிகர்களை நிற்க வைத்தே விழா கொண்டாடிய 'கோப்ரா' குழு
சினிமாவை வாழ வைப்பது ரசிகர்கள்தான். அந்த ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து இருக்கைகளை நிறைத்ததால் தான் நடிகர்களுக்குப் பேரும், புகழும், தயாரிப்பாளர்களுக்கு வசூலும், லாபமும். அப்படிப்பட்ட ரசிகர்களை நேற்றைய 'கோப்ரா' இசை வெளியீட்டு விழாவில் மழையில் கால் கடுக்க நிற்க வைத்து விழாவைக் கொண்டாடினார்கள்.
சென்னை, வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் வளாகத்திற்குள் திறந்த வெளியில் நேற்று மாலை இந்த விழா நடைபெற்றது. விழா ஆரம்பிப்பதற்கு முன்பே, விருந்தினர்களுக்காகவும், பத்திரிகையாளர்களுக்காகவும் போடப்பட்டிருந்த சேர்கள் மழையில் நனைந்தன. ஈரமான இருக்கைகளில் அமர முடியாமல் அனைவரும் தவித்தார்கள். சிலர் சண்டை போட்டதால் குறைந்த அளவில் பிளாஸ்டிக் சேர்களை பிறகு ஏற்பாடு செய்தார்கள். பத்திரிகையாளர்களுக்கு அந்த சேர்கள் கூட இல்லை. நூறு பேர் மேல் வந்திருக்க பத்து சேர்கள் மட்டுமே போடப்பட்டன.
மேலும், ரசிகர்களை விழா நடக்கும் பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. ரசிகர்கள் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக அடியாட்கள் போல செயல்படும் 'பவுன்சர்கள்' நியமிக்கப்பட்டிருந்தார்கள். அந்த பவுன்சர் அடியாட்கள் விழாவுக்கு வருபவர்களிடம் அத்துமீறி நடந்த சம்பவங்களும் நடந்தது. பலர் அவர்களிடம் சண்டை போட்டுத்தான் விழா அரங்கம் பகுதிக்கே நுழைய முடிந்தது. விழா நடக்கும் இடத்திலிருந்து சுமார் இருபது மீட்டர் தொலைவில்தான் ரசிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அவ்வப்போது மழை பெய்ய, அமர இருக்கைகள் இல்லாமல் அவர்கள் விழா நடந்த நேரம் முழுவதும் நின்று கொண்டே விழாவைப் பார்த்தார்கள்.
ரசிகர்களுக்கு இருக்கைகள் இல்லாதது பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் யாருமே வருத்தம் தெரிவிக்கவில்லை. இப்படி ஒரு மோசமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழா சமீபத்தில் தமிழ் சினிமாவில் நடந்ததில்லை என விழாவுக்கு வந்தவர்கள் புலம்பிக் கொண்டே பாதியிலேயே கிளம்பினார்கள்.
கடந்த பத்து நாட்களாகவே சென்னையில் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்க, இந்த சமயத்தில் திறந்த வெளியில் விழா நடத்தலாம் என யோசனை சொன்னவர் யாரோ ?.
தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குனர் அஜய் ஞானமுத்து, விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி ரவி, இர்பான் பதான், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.