தனிப்பட்ட காரணங்களுக்காக ராகுல் காந்தி திடீர் ஐரோப்பா பயணம்!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென ஐரோப்பா  சென்றுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதுபோல சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை ஜூலை 21ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ராகுல் நாடு திரும்புவார் என்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக  வரும் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கட்சித் தலைவருக்கான காங்கிரஸின் உட்கட்சித் தேர்தல்கள் மற்றும் அதன் மிகவும் பிரபலமான ‘பாரத் ஜோடோ யாத்ரா’ பற்றி விவாதிக்க வியாழன் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. முக்கியமான இந்த இரு கூட்டங்களையும் ராகுல் தவறவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மே மாதம் இந்தியாவின் பல மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடந்துகொண்டிருந்தபோது,  அதில் கவனம் செலுத்தாமல், ராகுல் காந்தி நேபாளம் சென்றார். அங்கு ஓர் இரவு விடுதியில் அவர் ஒரு பெண் அருகில் இருந்தது சர்ச்சையாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அரசியல் களத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும்போது, அதில் கலந்துகொள்ளாமல், ராகுல்காந்தி வெளிநாடு செல்வது,  சொந்தக் கட்சிக்குள்ளேயே விமர்சனத்தை ஏற்படுத்தியது. தற்போதும் முக்கிய பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற உள்ள நிலையில், ராகுல் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

ராகுல்காந்தி  இம்முறை ஐரோப்ப நாடுகளுக்கு தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றுள்ளார் என்று டெல்லியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.