புதுச்சேரி: 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி புதுச்சேரியிலுள்ள 75 பள்ளிகளைப் பார்வையிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டு மாணவிகளோடு கலந்துரையாடினார்.
முன்னதாக ஆளுநரை மாணவிகள் அன்போடு வரவேற்றனர். அங்கு, மாணவிகளின் கை வண்ணத்திலான காட்சிப் பொருட்களை ஆளுநர் பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற மாணவிகள் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார். அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் உடனிருந்தார்.
தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு ஆளுநர் தமிழிசை விளக்கமளித்தார். மாணவி ஒருவர் ”பெண்களுக்கு முழுமையாக சுதந்திரம் கிடைத்துள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர் தமிழிசை பதிலளித்து பேசும்போது, ”சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். ஆனால் பெண்கள் இன்னும் நமக்கு விடுதலை கிடைக்கவில்லை என்று நினைக்கின்றனர்.
என்னை பொறுத்தவரையில் விடுதலை என்பது மற்றவர்கள் கொடுத்து பெறுவது இல்லை. நாமே எடுத்துக்கொள்வது தான் விடுதலை. முந்தைய காலத்தில் படிக்க வசதியின்றி இருந்தோம். ஆனால் தற்போது அனைவரும் படித்து பள்ளிக்கு வருகின்றோம்.
நான் ஒரு பெண். எண்ணால் எதுவும் முடியாது என்ற நினைப்பை விட்டுவிட வேண்டும். ஆணுக்கு நிகர் பெண் என்று பெரியவர்கள் சொல்லியுள்ளனர். ஆனால் நான் சொல்கிறேன் ஆணைவிட பெண்கள் மேல் என்று. எதற்காகவும் மகிழ்ச்சியை தொலைத்துவிடாதீர்கள். இந்த வாழ்க்கை வாழ்வதற்குத்தான்.
பட்டாம்பூச்சியைப் போல் மகிழ்ச்சியாக வாழலாம். 90 மதிப்பெண் வாங்கினால் மகிழ்ச்சியாக இருக்கலாம். 35, 36 மதிப்பெண்கள் வாங்கினால், 90 மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி நடைபோடலாம். ஆகையால் மகிழ்ச்சியாக வாழுங்கள். விடுதலை கிடைத்துவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
தொடர்ந்து மற்றொரு மாணவி ”தங்களின் அரசியல் பயணத்தில் நிறைவேறாத ஆசை என்ன?” என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு ஆளுநர் தமிழிசை மிகுந்த நகைப்புடன் ”நிச்சியமாக நிறைவேறாத ஆசை என்னவென்றால் மக்கள் பிரதிநிதியாக ஆக முடியவில்லை என்பதுதான். எம்எல்ஏ, எம்பியாகி பணியாற்ற வேண்டும் என்றிருந்தேன்.
எம்எல்ஏவாகி சட்டப்பேரவையில் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஆளுநராகி அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் ஆளுநர் உரையாற்றுவதற்காக இந்த வாய்ப்பை இறைவன் எனக்கு கொடுத்துள்ளார்.
தெலங்கானா, புதுச்சேரியில் சட்டப்பேரவைக்குள் நுழையும்போது சட்டப்பேரவை உறுப்பினராக சென்று ஒரு சீட்டில் உட்கார வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அத்தனை சீட்டில் உள்ளவர்களும் எனக்கு வணக்கம் சொல்லும் அளவுக்கு ஆளுநராக உட்கார்ந்துவிட்டேன். புதுச்சேரி ஆளுநராக வந்ததில் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் தமிழில் ஆளுநர் உரையாற்றிய ஒரே ஆளுநர் என்ற பெயரை பெற்றிருப்பது தான்” என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முத்திரையர்பாளையம் அருள்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலை பள்ளியை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார். இதில் எம்எல்ஏ ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.