ஆருத்ரா கோல்டு நிறுவனத்திடமிருந்து தங்கள் பணத்தை மீட்டு தருமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில் குவிந்த மக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்ட `ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதிலும் 20-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. இந்நிறுவனம் தங்களிடம் ‘ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 36,000 வரை வட்டி வழங்கப்படும்’ என்ற விளம்பரத்தை வெளியிட்டது. அதை நம்பி மக்கள் பலரும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இவ்விளம்பரத்தின் உண்மைத்தன்மை குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு ஆருத்ராவுக்குச் சொந்தமான சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, ஓசூர் போன்ற 26 இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது.
சோதனையில் பணம், கணினிகள்,செல்போன்கள், 60 சவரன் தங்கம், 2 கார் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன. மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டதற்காக நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து, நிறுவனத்தின் இயக்குநர்களான மோகன்பாபு மற்றும் பாஸ்கர் கைது செய்யப்பட்டனர். மேலும் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் நூற்றுக்கும் மேலானோர், எதிர்பாராத விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றாக திரண்டு, தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கூறியுள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், திடீரென மக்கள் திரண்டதைக் கண்டதும், அவர்களிடம் விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
பேச்சு வார்த்தைக்கு உடன்படாத சிலர் எஸ்பிளனேடு காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். அப்போது முதலீட்டு பணத்தை மீட்டு கொடுப்பது குறித்த அரசு அறிவிப்பை போலீஸார் முதலீட்டரளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்த பின், அங்கிருந்து கூட்டம் கலைந்து சென்றது.