மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு உருவானது.
2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, `மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள்.
இப்போது நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பரமேஸ்வரன் ஐயர் 1981 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச பிரிவில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தவர். தனியார் மற்றும் பொதுத் துறைகளில் பணிபுரிந்தவர். 2016 முதல் 2020 வரை மத்திய குடிநீர் மற்றும் தூய்மை பணிகள் அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர்.
25 ஆண்டுகள் குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் துறையில் அனுபவம் பெற்ற இவர், 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தியாவின் முதன்மை திட்டங்களில் ஒன்றான ஸ்வச் பாரத் மிஷனை (Swachh Bharat Mission) செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார்.
பிப்ரவரி 17, 2016 முதல் இரண்டு ஆண்டுகள் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் காந்த் பணிபுரிந்தார். அதன் பிறகு இவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 30 ஆம் தேதியுடன் இவரின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, இப்பதவிக்கு தற்போது பரமேஸ்வரன் ஐயர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். திங்கட் கிழமையன்று பரமேஸ்வரன் ஐயர் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.
“நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நாட்டிற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியதில் பணிவும், பெருமையும் அடைகிறேன். இந்தியாவை மாற்றுவதற்கான பணிகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பணியாற்ற மற்றுமொரு வாய்ப்பு கிடைத்ததற்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.