வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிரபஞ்சம் உருவானபோது தோன்றிய நட்சத்திரங்கள் பற்றி ஆய்வு செய்யும் நோக்குடன் அனுப்பப்பட்ட நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது.
அமெரிக்க விண்வெளி மையம் ( நாசா), ஐரோப்பிய, கனடா விண்வெளி மையம் இணைந்து 20 ஆண்டு உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின.
2021 டிச. 22ல் ஏரியன் – 5 ராக்கெட்டில் விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. 2022 ஜன. 25ல் பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் தங்கத்துடன் பெர்லியம் பூசப்பட்ட குவி ஆடி கண்ணாடிகள் உள்ளன. ஒன்றின் எடை 21 கிலோ. இதுபோல 18 உள்ளது. தொலைநோக்கியின் விட்டம் 21 அடி. இதனால் தொலைதுாரத்தில் உள்ள நட்சத்திரங்கள், சிறுகோள்களை படம் எடுக்க முடியும்.
ரூ. 76,000 கோடி
இதன் எடை 6200 கிலோ. மைனஸ் 233 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்கும். திட்ட மதிப்பீடு ரூ. 76,000கோடி.
ஹபிள் தொலைநோக்கி
நாசா 1990ல் ஹபிள் தொலைநோக்கி அனுப்பிய பிரபஞ்சத்தின் படங்களை வைத்துதான், 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் ‘பிக் பேங்’ எனும் இந்த பிரபஞ்ச வெடிப்பு ஏற்பட்டு கிரகங்கள் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.இந்த தொலைநோக்கியின் விட்டம் 7 அடி. இதை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.
ஒளி ஆண்டு
* ஒரு ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணித்த தொலைவு. ஒரு வினாடிக்கு ஒளி 3 லட்சம் கி.மீ., துாரம் பயணிக்கிறது.
* பூமியில் இருந்து 15 கோடி தொலைவில் உள்ள சூரிய ஒளி, பூமியை அடைய 8 நிமிடம் ஆகிறது. அதுபோல பல லட்சம் ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் நட்சத்திரங்கள், கிரகங்களில் இருந்து வெளியிடும் ஒளியும் பல கோடி ஆண்டுகளாக அண்டவெளியில் பயணித்துக்கொண்டிருக்கும். அந்த நட்சத்திரம் அழிந்து விட்டாலும் அதன் ஒளி பயணிக்கும். அதன்படி இன்று நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் கூட பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தவையாக இருக்கலாம்.
* இந்த அடிப்படையில் 1380 கோடி ஆண்டுக்கு முன்பிருந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியது. படத்தை எடுக்க 12.5 மணி நேரம் ஆனது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement