லண்டன்: ஓவல் ஒருநாள் போட்டியில் ‘வேகப்புயலாக’ மிரட்டிய பும்ரா, 6 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ‘சூப்பர்’ வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு சுருண்டது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். தொடையின் பின் பகுதியில் லேசான காயம் அடைந்த கோஹ்லி சேர்க்கப்படவில்லை. இவருக்குப் பதில் ஸ்ரேயாஸ் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்தின் பட்லர் முதன் முறையாக ஒருநாள் போட்டியில் கேப்டனாக களமிறங்கினார்.
விக்கெட் சரிவு
இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆடுகளத்தில் புற்கள் காணப்பட, பந்து நன்றாக ‘சுவிங்’ ஆனது. வாய்ப்பை பயன்படுத்திய இந்திய ‘வேகங்கள்’ போட்டுத் தாக்கினர். இரண்டாவது ஓவரை வீசிய பும்ரா, 4வது பந்தில் ஜேசன் ராயை ‘டக்’ அவுட்டாக்கினார். பின் வந்த ஜோ ரூட்டை, 2வது பந்தில் ‘டக்’ அவுட்டாக்கினார்.
மறுபக்கம் தன் பங்கிற்கு மிரட்டினார் முகமது ஷமி. முதலில் இவர், ஸ்டோக்சை ‘டக்’ அவுட்டாக்க, இங்கிலாந்து அணி 7 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது.
மீண்டும் மிரட்டல்
மறுபடியும் அசத்திய பும்ரா, இம்முறை பேர்ஸ்டோவை (7) வெளியேற்றினார். அடுத்து வந்த லிவிங்ஸ்டனையும், பும்ரா ‘டக்’ அவுட்டாக்க, இங்கிலாந்து அணி 26 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பட்லர், மொயீன் அலி இணைந்து அணியை மீட்க போராடினர்.இது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில், அவரிடமே ‘கேட்ச்’ கொடுத்தார் மொயீன் அலி (14).
இதன் பின் வேகமாக ரன் குவிக்க முயன்ற பட்லரை (30), ஷமி அவுட்டாக்கினார். அதே ‘வேகத்தில்’ ஓவர்டனையும் (8) ‘பெவிலியன்’ அனுப்பி வைத்தார் ஷமி. பின் வரிசையில் கார்ஷ் (15), வில்லியை (21) பும்ரா வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 25.2 ஒவரில் 110 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவின் பும்ரா 6, ஷமி 3 விக்கெட் சாய்த்தனர்.

ரோகித் விளாசல்
சுலப இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித், ஷிகர் தவான் ஜோடி அசத்தல் துவக்கம் கொடுத்தது. ரோகித் தனது 45வது அரைசதம் கடந்தார். கார்ஸ் பந்தை விளாசிய இவர், ஒருநாள் அரங்கில் 250 வது சிக்சர் அடித்தார். தவான் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (76), தவான் (31) அவுட்டாகாமல் இருந்தனர். தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருதை பும்ரா வென்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்