திருப்பதி பிரமோற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி; செப். 27ல் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது

திருமலை: திருப்பதியில் செப்டம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரமோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. பின்னர் சுப்பா ரெட்டி அளித்த பேட்டி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள். ஆனால், கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக கோயிலுக்குள் பக்தர்கள் இன்றி இது நடந்தது. இந்தாண்டு பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் வெள்ளத்தில் சிறப்பாக நடத்தப்படும். எவ்வளவு பக்தர்கள் வந்தாலும், அதை தாங்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். வரும் செப்டம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி, 9 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 1ம்தேதி கருட சேவை நடைபெறும். ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சனேயருக்கு செம்பு கவசம் அகற்றி தங்க கவசம் ரூ.18.75 லட்சம் செலவில் செய்யப்பட உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பக்தர் ஒருவர் பெங்களூர் டாலர்ஸ் காலனியில் 3,080 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு, ரூ.3.23 கோடி ரொக்கம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கி உள்ளார். ஏழுமலையான் கோயில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலைய தங்க தகடுகள் மாற்றுவது குறித்து ஆகம ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும். திருமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆக்டோபஸ் கமொண்டோ படையினருக்கான கட்டிடப் பணிக்கு அரசு ரூ.10 கோடி வழங்கிய நிலையில் தேவஸ்தானம் சார்பில் ரூ.7 கோடி வழங்கி பணிகள் முடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.