உயர் கல்வி அமைச்சர் புறக்கணித்தாலும் திட்டமிட்டபடி நடக்கவுள்ள காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா

மதுரை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் புறக்கணித்தாலும், திட்டமிட்டபடி காமராசர் பல்கலையின் 54 வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது. இது பல்கலை. நிர்வாகம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 3 மாதத்திற்கு முன்பு, ஜெ. குமார் பொறுப்பேற்றார். இவர், பொறுப்பேற்ற பிறகு பல்கலையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 54-வது பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.

இதன்படி, பட்டமளிப்பு விழா டாக்டர் மு.வ. அரங்கில் இன்று ( ஜூலை 13) பிற்பகல் 1 மணிக்கு நடக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்என். ரவி பங்கேற்று, பட்டங்களை வழங்கி விழா பேருரையாற்றுகிறார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல், ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கவுரவ விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்திய அறிவியல் நிறுவன உயிரியல் அறிவியலுக்கான தேசிய மைய இருக்கை பேராசிரியர் ப. பலராம் முதன்மை விருந்தினராக பங்கேற்று, பட்ட மளிப்பு உரையாற்றுகிறார்.

இந்த விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட் டோருக்கு பிஎச்டி, எம்.பில் உள்ளிட்ட பட்டமும், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. பட்டமளப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ. குமார், பதிவாளர் ( பொறுப்பு) மு. சிவக்குமார் அதிகாரிகள் செய்துள்ளனர்.

இந்நிலையில், பல்கலை இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி விழாவில் பங்கேற்று, வாழ்த்துரை வழங்குவார் என, பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் அச்சிடப்பட்டு இருந்தது. இதற்கிடையில், அவர் திடீரென விழாவை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. | வாசிக்க > பல்கலை. மாணவர்களிடையே அரசியலை புகுத்தும் நடவடிக்கைகளில் ஆளுநர்? – அமைச்சர் பொன்முடி சந்தேகம்

இதன் காரணமாக விழா தள்ளி போகலாம் என சந்தேகம் எழுந்தது. இது குறித்து பல்கலை நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ”பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு ஏறக்குறைய முடிந்துவிட்டு, இறுதிக்கட்ட பணியில் இருப்பதால் விழாவை தள்ளிப்போட வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி, பட்டமளிப்பு விழா நடைபெறும். இறுதி நேரத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படலாம்,” என கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.