சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர். இந்த மோதலில் 2 போலீஸார் உட்பட 47 பேர் காயம் அடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த வன்முறையை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மோதல் தொடர்பாக 14 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். மேலும், வன்முறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையஉதவி ஆய்வாளர் காசுப்பாண்டி, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
7 பிரிவுகளின் கீழ் வழக்கு: அதன்படி, கலவரத்தை தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மோதலில் ஈடுபட்டவர்கள் யார் யார்? எனவீடியோ காட்சிகளைக் கொண்டு அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
இதற்கிடையே, மோதல் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என 400 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் மீது புகார்: இந்நிலையில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் புகார் அளித்துள்ளார். அதில், ‘‘அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல் மற்றும் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தில் இருந்தமுக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன்,மனோஜ் பாண்டியன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களுடன் வந்த அடியாட்கள், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்து, அனைத்தையும் மீட்டுத் தர வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பானவிசாரணைக்காக 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வங்கி கணக்கை கைப்பற்ற தீவிரம்: அதிமுகவில் பழனிசாமி தரப்பினர் நேற்று முன்தினம் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி, இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்தனர். மேலும்,அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியதுடன், கட்சியின் பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் கணக்குகள்உள்ள கரூர் வைஸ்யா வங்கியின் மயிலாப்பூர் கிளைக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், அதிமுகவின் பொருளாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு, பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு முதல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன்.
நான்தான் பொருளாளர்: மேலும், கட்சி, அதிமுக தலைமை அலுவலகம், அதிமுக வளர்ச்சி நிதி ஆகிய வற்றுக்கான கணக்குகள், பல்வேறு வைப்புநிதிகள் ஆகியவற்றை, அதிமுகவின் பொருளாளர் என்ற நிலையில் நிர்வகித்து வருகிறேன். இந்நிலையில், ஜூலை 11-ம் தேதி சட்ட விரோதமாக அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசனை எனக்கு பதில் அதிமுக பொரு ளாளராக நியமித்துள்ளனர்.
தற்போது வரை நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளாகவும், பொருளாளராகவும் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களிலும், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னைஉயர் நீதிமன்ற வழக்குகள் அடிப்படையிலும் உள்ளேன். எனவே, திண்டுக்கல் சீனிவாசன் அல்லது வேறு யாரையும் கட்சியின் கணக்கு களை இயக்க அனுமதிக்க வேண்டாம்.
அதிமுக பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளை இயக்கும் பொறுப்பை வேறு யாருக்கும் வழங்கி, அதனால் ஏதேனும் குழப்பங்கள் ஏற்பட்டால் அதற்கு தாங்களே பொறுப்பாவீர்கள். இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பழனிசாமி கடிதம்: இதற்கிடையே, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக நேற்று முன்தினம் பொறுப்பேற்ற முன்னாள் முதல்வர் பழனி சாமி, அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்துள்ளது குறித்த தகவலை கடிதம் மூலம் வங்கிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்குழுவில், வங்கியில் அதிமுக பெயரில் நிலை வைப்புத்தொகையாக ரூ.240 கோடியும், நடப்புக் கணக்கில் ரூ.2.77 கோடியும், அண்ணா தொழிற்சங்கக் கணக்கில் ரூ.32 கோடியும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீலை அகற்றக் கோரும் மனு: அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் வெடித்த நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத் துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீலைஅகற்றக் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளோம். ஆகவே அந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண் டும்’’ என கோரி முறையீடு செய்தார்.
அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் நாளை(இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்படும் என்றார்.
ஓபிஎஸ்-ஸும் மனு: இதற்குப் போட்டியாக உண்மையான அதிமுக நாங்கள் தான் எனக்கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர்கள் சி.திருமாறன், பி.ராஜலட்சுமி ஆகியோர் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக ஆஜராகி, அதிமுகஅலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலைஅகற்றக் கோரி மனு தாக்கல் செய்யஉள்ளதாகவும், எனவே அந்த மனுவைஅவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் முறையீடு செய்தனர். அந்த மனுவையும் இன்று (ஜூலை 13) விசாரிக்க நீதிபதி என்.சதீஷ்குமார் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.