தி.மு.க., எம்.பியும், கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. ‘தி.மு.க.,வில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என சமீபத்தில் பா.ஜ.க.,வில் இணைந்த இவருக்கு ‘பா.ஜ.க., ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர்’ பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 11-ம் தேதி விக்கிரவாண்டி அருகே சென்று கொண்டிருந்த சூர்யா சிவாவினுடைய கார் மீது, ஆம்னி பேருந்து ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காருக்கும் ஆகும் செலவைக் கொடுத்துவிடுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் கேட்டுக்கொள்ள, சூர்யா சிவா அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.
அதன்பிறகு காருக்கு ஆன 5 லட்ச ரூபாய் பணத்தைக் கேட்டு, சூர்யா சிவா பலமுறை ஆம்னி பஸ் உரிமையாளரை அணுக, எந்த ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்திருக்கிறது. அதையடுத்து ஜூன் 19-ம் தேதி சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து நிறுவனத்தினுடைய பேருந்து ஒன்றியனை, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சூர்யா சிவா எடுத்துவந்து தன்னுடைய இடத்தில் நிறுத்தியிருக்கிறார்.
அதையடுத்து, ‘எங்களுடைய பேருந்தை கடத்தி வைத்துக்கொண்டு, சூர்யா சிவா பணம் கேட்டு மிரட்டுகிறார்’ என சம்பந்தப்ப்பட்ட ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளர் முருகானந்தம் என்பவர், திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி, ஜூன் 23-ம் தேதி சூர்யா சிவா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 17 நாள்கள் சிறையிலிருந்து சூர்யா சிவா, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், `தினந்தோறும் சம்பந்தப்பட்ட திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும்’ என்ற நிபந்தனையுடன், ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த சூர்யா சிவா நேற்றிரவு ஜாமீனில் வெளியே வந்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்த சூர்யா சிவாவிற்கு பா.ஜ.க.,வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையோ ‘பொய்யான வழக்குகள் போடுவதை வாடிக்கையாகக் கொண்ட இந்த விளம்பர அரசுக்கு மீண்டும் ஒருமுறை உயர் நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது’ என சூர்யா சிவா ஜாமீனில் வெளியே வந்திருப்பது குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.