அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 11

அழகிய பெரியவன்

துப்பாக்கியை முடுக்கும் விசை வெறுப்பு

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷூ அபே, நாரா நகரத்தில், நாடாளுமன்ற மேல்சபை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். அபே ஜப்பானில் பத்தாண்டு காலமாக பிரதமர் பதவியில் இருந்தவர். லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர். பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். அபேவின் தாத்தா நொபுஷிகி கிஷி இரண்டாம் உலகப் போரில் ஓர் அதிகாரியாக இருந்து, ஜப்பான் பிரதமரானவர். அவரும் இதைப்போலவே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், கத்தியால் குத்தப்பட்டும் உயிர்பிழைத்திருக்கிறார்.

ஷின்ஷூ அபே ’அபேனாமிக்ஸ்’ என்ற பெயரில் பொருளாதார சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்து ஜப்பானை மீண்டும் உலக அரங்கில் முன்னிலைப் படுத்தியவர். அரசாங்க செலவுகளைக் குறைத்தல், எளிமையான நிர்வாகம், கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள், தாராளவாத பொருளாதாரம் ஆகிய அம்சங்கள் இந்த அபேனாமிக்ஸ்சில் அடங்கும். மிக முக்கியமாக ஆணாதிக்கம் கொண்ட ஜப்பான் தொழில்துறையை பெண்களுக்கு திறந்து விட்டவர் அபே.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், சொந்த நாட்டின் பாதுகாப்புக்கன்றி வேறு நாட்டின் மீது ஜப்பான் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளாது என்ற சட்டம் உருவானது. 2014ல் அங்கு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்துக்குப் பிறகு ஜப்பானிய ராணுவம் நட்பு நாடுகளுக்கு உதவலாம் என நிலைமை மாறியது.

2022 தேர்தலுக்குப் பின்னர் அமையும் மேல்சபையின் மூலம் இது தொடர்பான வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இந்தத் தடை முற்றிலும் நீக்கப்படலாம் என்பது அங்கிருப்பவரின் கருத்து. இதனால் ஜப்பான் மீண்டும் பிறநாட்டு எல்லைகளுக்கு இராணுவத்தை அனுப்பலாம். அல்லது அது பசிபிக்கடல் பகுதியில் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து கூட்டாக இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

இத்தகு திருத்தங்களின் வழியே, அபே தங்களின் எதிரியாகிய சீனாவை எதிர்ப்பதற்காக, அமெரிக்காவுடன் நெருக்கமாக உறவாடும் வகையில் மறைமுகமான அடித்தளங்களை அமைக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அங்கு எழுந்தது. ஜப்பானிய தலைவர்களிலேயே அமெரிக்க அதிபர்களுடன் நெருக்கமாக உறவாடியவர் அபே ஆவார். அபேவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, “ஹிரோஷிமாவுக்கும், பேர்ள் ஹார்பருக்கும் நாங்கள் இருவரும் சேர்ந்து மேற்கொண்ட பயணத்தை மறக்க முடியாது” என்று நினைவு கூர்ந்திருக்கிறார். இந்தச் செய்தியே அபேவின் அரசியல் அணுகுமுறையையும் கருத்து நிலையையும் தெரிவித்துவிடுகிறது.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வீச்சுகளும், பேர்ள் ஹார்பர் தாக்குதலும் இருநாடுகளின் வரலாற்றிலும் மறைக்க முடியாத வடுக்கள். அதிலும் குறிப்பாக ஹிரோஷிமா நாகசாகியின் மீது அமெரிக்கா மேற்கொண்ட அணுகுண்டு தாக்குதல் மானுட கொடூரத்தின் உச்சம். இந்த வரலாற்றின் வடுக்களை அபேவால் மறைக்க முடியாது என்றாலும் அவற்றின் மீது அவர் இணக்கமெனும் களிம்பைப் பூச விரும்பியிருக்கிறார் என்று யூகிக்க முடிகிறது.

அபே உறுதிப்பாடு கொண்ட ஆளுமை என்பது புரிகிறது. அந்த உறுதிப்பாட்டை ஒரு துப்பாக்கி குண்டு நிலைகுலையச் செய்திருக்கிறது. அந்தத் துப்பாக்கி குண்டை முடுக்கிய விசை வெறுப்பு. அபேவை கொலை செய்த, 41 வயது நிரம்பிய டெட்ஷூயா யமகாமி என்ற முன்னாள் கப்பற்படை வீரன், ”நான் அபேவை வெறுக்கிறேன். அவரை பிடிக்காததால் தான் கொலை செய்தேன்” என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான்.

ஜப்பான் அணுகுண்டுகளை ஏற்ற நாடு. கடும் உழைப்பின் மூலம் அந்தப் பேரழிவிலிருந்து தன்னை மறுநிர்மாணம் செய்துகொண்ட நாடு. உறுதியான சட்டங்களைக் கொண்ட ஆனால் அதே நேரத்தில் அமைதியை விரும்புகின்ற ஜனநாயக நாடு. அடிப்படையில் கிராம அலகுகளிலிருந்து உருவான நாடுதான் ஜப்பான். கூட்டுழைப்பு வேளாண்மையும், ஒருவருக்கொருவர் உதவுதலும் ஜப்பானிய கிராம சமுதாயத்தின் அடிப்படைப் பண்புகள். பௌத்தத்தின் பல்வேறு கிளைகளை உள்ளடக்கிய ஷிண்டோ ஜப்பானின் பூர்வீக மதம். பின்னர் அங்கு உருவாகிய நவீன மதமான ஷின்கோ ஷுக்யோ புதிய பௌத்தம், கன்பூசியம், கிறித்தவம் ஆகிய மதங்களின் கருத்தாக்கங்களை இணைத்துக் கொண்டது. அதை அவர்கள் ‘விழுமியங்களை உருவாக்கிடும் சமூகம்’ (Value Creation Society) என்று தான் அழைக்கிறார்கள். அந்த நாட்டில்தான் இத்தகு கொலை நடந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிகிறது.

வெறுப்பு

ஷின்ஷூ அபேயின் கொள்கைகளும் நிலைப்பாடுகளும் கொலையாளிக்கு பிடிக்கவில்லை என்றால் அதை அவன் தேர்தலில் காட்டியிருக்கலாம். அல்லது அந்நாட்டு சட்டங்கள் அனுமதிக்கின்றபடி தன்னுடைய எதிர்ப்பை பிறவகைகளில் வெளிப்படுத்தி யிருக்கலாம். ஆனால் அவன் தனது வெறுப்பைத் தெரிவிக்க ஜனநாயகச் செயல்களையோ, சொற்களையோ நம்பாமல் துப்பாக்கி குண்டைத் தேர்வு செய்திருக்கிறான். வெறுப்பு முதலில் அறிவைக் கொன்றுவிடுகிறது. பின்னர் ஆளையும் கொன்றுவிடுகிறது.

மனித சமூகம் நாகரிக விழுமியங்களை கைக்கொள்ளத் தொடங்கிய காலத்திலிருந்தே அன்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான இந்தப் போராட்டம் தொடர்ந்து நடை பெற்றுவருகிறது. நிற வெறி, பாலாதிக்க வெறி, சாதி வெறி, மத வெறி, உடைமை வெறி, அதிகார வெறி, அறிவாதிக்க வெறி என அனைத்தின் பின்னாலும் கொடூர ஆயுதங்களை வைத்துக்கொண்டு வெறுப்பு ஒளிந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1


ஏழுவகையான வெறுப்புகள் இருக்கின்றன என்கிறார்கள். 1.அங்கீகரிக்கப்பட்ட வெறுப்பு 2.தீவிர வெறுப்பு 3.மென்மையான வெறுப்பு 4.பற்றியெரியும் வெறுப்பு 5.பகுதி வெறுப்பு 6.இயல்பிலேயே வெறுப்பு அல்லது மூர்க்கத்தனமான வெறுப்பு 7.எளிதில் பரவும் வெறுப்பு.
வெறுப்பு எதனால் உருவாகிறது? வெறுப்பின் பின்னால் இருக்கும் உளவியல் என்ன? வெறுப்பின் பின்னால் இருக்கும் காரணங்கள் சிக்கலானவை எனச் சொல்கிறது உளஅறிவியல்.

1.மற்றவர் மீதான பயம்

நமக்கு அந்நியமான ஒன்றின்மீது ஏற்படும் அச்சத்தால் வெறுப்பு உருவாகிறது. இதை ’உட்குழு – வெளிக்குழு’ கருத்தியலைக் கொண்டு நடத்தையியல் அறிஞர்கள் விளக்குகிறார்கள். மற்றவர்களால் (வெளிக்குழு) ஆபத்து உருவாவதாக நாம் நினைக்கும்போது, உயிர்வாழும் அச்சத்தின் காரணமாக, நாம் நம்முடைய குழுவிடம் (உட்குழு) மேலும் நெருக்கமாகச் சென்று ஒட்டிக்கொள்கிறோம். இப்படிச் செய்வதனால் சொந்தக் குழுவின் மேல் அதீத பற்றும், பிற குழுவின்மேல் கோபமும் ஏற்படுகிறது.

2.தம்மைக் குறித்த பயம்

பிறரை எதனால் வெறுக்கிறோமோ அது தங்களுக்குள்ளேயும் இருப்பதை நினைத்து பயப்படுவது. இதை சிக்மண்ட் பிராய்ட் காட்சிப்படுத்துதல் (Projection) என்கிறார். நாம் நம்மில் இருக்கும் விரும்பாத ஒன்றை பிறர் விவரிக்கும்போது அதை நிராகரித்துவிடுகிறோம். இதற்கு உள்ளே ஒளிந்துகொண்டிருப்பது ’நான் மோசமில்லை. நீதான் மோசம்’ என்கிற மனநிலைதான். நான் விரும்புவது நல்லது தான். அது தவறான ஒன்றல்ல என்று வலியுறுத்தும் பொருட்டு தாக்கத் தொடங்குகிறோம். நமக்குள் இருக்கும் முட்டாள் தனமோ, கெட்டதோ வெளியே தெரிந்துவிடுமானால் அது நம்மை சிக்கலுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாக்கி தனிமை படுத்திவிடுகிறது. ஆகவே நாம் இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள விரும்புகிறோம். நம்மிடம் இருப்பதை சரியென்று சொல்லும் பொருட்டு பிறரை விமர்சிக்கவும் நியாயம் தீர்க்கவும் முயல்கிறோம்.

3.தன்னை நேசிக்காத தன்மை

பிறர்மீது மட்டுமின்றி தம்மீது அக்கறை அற்றவர்களிடமும் வெறுப்பு உருவாகிறது. தன்னிடமிருக்கின்ற, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுக்காக, பிறரிடமிருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில், தாக்குகிறோம். நாம் நம்மையும், நம்மிடம் இருப்பவற்றையும் சரியென ஏற்றுக்கொண்டோமானால், பிறரையும், பிறறிடம் இருப்பவற்றையும் கூட அவ்வாறே ஏற்றுக்கொள்வோம்.

4.வெறுமை

வெறுப்புணர்வு என்பது நம்மிடமிருக்கும் வெற்றிடத்தையும் வெறுமையையும் பயன்படுத்தி ஒரு குழுவுடனோ அல்லது ஆதரவுடனோ நம்மை இணைத்துவிடுகிறது. நம்மை தனித்த அடையாளத்திலிருந்து விலக்கி, சவால் மிக்கதும் எதிர்பார்ப்புகளை உடையதுமான செயலுடன் பிணைத்துவிடுகிறது. ஆதரவற்ற நிலை, அதிகாரமற்ற நிலை, அநீதிக்கு ஆட்பட்ட நிலை, போதாமை, அவமானம் ஆகியவற்றிலிருந்தே ஒருவரை வெறுப்பு ஆட்கொள்கிறது. நமக்குள்ளே இருக்கும் வலிகளின் தற்காலிக தீர்வாக வெறுப்பு அமைந்துவிடுகிறது.

5.சமூக மற்றும் பண்பாட்டு காரணிகள்

வெறுப்புணர்வுக்கு நாமோ அல்லது நம்முடைய குடும்பமோ மட்டுமே காரணமாகி விடுவதில்லை. சமூக பண்பாடுக் கூறுகளும், அரசியல் வரலாறும் கூட இதற்குக் காரணமாகின்றன. போர்ச் சூழலில் நாம் வாழ்வோமெனில், போராட்டம்தான் நமது வாழ்க்கை முறையாக இருக்கும். பகைவனுக்கு அருள்வாய் என்று நமக்குக் கற்பிக்கப் பட்டால் அங்கு அன்புக்கும், கருணைக்கும், புரிதலுக்கும் வாய்ப்பிருக்கும். அவ்வாறு இல்லையென்றால் ஒருவர் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு பதிலாக சண்டையிடவே செய்வார். அங்கு அமைதி என்பது ஒரு தேர்வு மட்டுமே. (ஆதாரம்: Psychology Today)

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

மற்றவரைக் குறித்து நாம் வைத்திருக்கும் எதிர்மறை கருத்திலிருந்து மட்டுமே வெறுப்பு உருவாவதில்லை. மாறாக ஒருவரின் தனிப்பட்ட வரலாற்றிலிருந்தும் தான் உருவாகிறது. ஒருவரின் தனிப்பட்ட வரலாறென்பது அவர் குடும்பத்தின் வரலாறு. அக்குடும்பம் இருக்கும் நாட்டின் வரலாறு. அந்நாட்டிலிருக்கும் சமூகம் பயிலுகின்ற விழுமியங்களின் வரலாறு.

உலக நாடுகள் அனைத்திலுமே வரலாற்று காலங்களில் பலவகையான அடக்குமுறைகள் இருந்திருக்கின்றன. இவற்றில் சரிபாதியளவோ அல்லது முழுமையுமோ வெறுப்பாலேயே நிகழ்ந்திருக்கின்றன. தற்போது நிகழ்பவற்றுக்கும் காரணம் அதுதான். நவீன காலம் என்பதற்கு கிஞ்சித்தும் பொருந்தாமலேயே மனித குலத்தின் மீதான சகமனித தாக்குதல்களும், கொடூரங்களும் நிகழ்ந்து வருகின்றன. உக்ரைன் மீதானா ரஷ்யாவின் போர் என்ற ஒற்றை உதாரணமே இதற்கு போதும்.

கருப்பின அடிமைகளை விடுவிக்க சட்டம் கொணர்ந்த ஆபிரகாம் லிங்கன், நான் அடிமைகளை விடுவிக்க விரும்புகிறேன் என்று பேசிக்கொண்டிருந்த கணமே, கொலையாளி ஜான் விக்ஸ் பூத் அவரைக் கொல்ல விரும்பியிருக்கிறான். அவ்வளவு நிறவெறி அவனுடைய மனதிலே பற்றியெரிந்திருக்கிறது. அதே வெறியின் தொடர்ச்சிதான் மார்ட்டின் லூதர் கிங்கை கொன்ற ஜேம்ஸ் ஏர்ல் ரேவுக்கு இருந்திருக்கிறது. (மார்ட்டின் லூதர் கிங்கை கொல்வதன் மூலம் எளிதில் புகழடையலாம் என்று அவன் நம்பியதாகவும் ஒரு காரணத்தை அரசுத்தரப்பு புலனாய்வு சொல்லியிருக்கிறது)

தீவிர கம்யூனிச நாடுகளிலும், சர்வாதிகார நாடுகளிலும் நடந்தேறிய அழித் தொழிப்புகளும் களையெடுப்புகளும் எவற்றால் நடந்தன? மாற்றுக் கருத்தை அச்சுறுத்தலாக நினைத்த பலவீனத்திலும் பயத்திலும் தானே? காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு இருந்தது மதவெறியும், சாதியாதிக்க வெறியும்தான்.

எம்.எம்.கல்புர்கியும், கோவிந் பன்சாரேவும், நரேந்திர தபோல்கரும், கௌரி லங்கேஷும் சுட்டுக் கொல்லப் பட்டது எதனால்? மதவெறியும் சகிப்பின்மையும் கற்பிக்கப்படும் இந்தியாவின் பண்பாட்டுச் சூழலினால் தானே? அன்பையும் அறத்தையும் கற்பிக்கின்ற திருக்குறளை போற்றாமல், போரை கொண்டாடிடும் ராமாயணமும், மகாபாரதமும், பகவத்கீதையும் தானே இங்கு பெருவாரியான மக்களால் போற்றப்படுகின்றன? ஒழுக்கத்தை முன்வைக்கின்ற புதிய பௌத்தத்தைப் புரக்கணித்து, சக மனிதனை அன்புசெய் என்று போதிக்காத பெருமத வழிபாட்டையே நமது நாடு ஆராதிக்கிறது. உலக நாடுகளால் பாராட்டப்படும் அரசியலமைப்புச் சட்டம் மட்டும் இல்லையென்றால் நம் வெறுப்பின் அளவு எவ்வளவு உச்சத்துக்கு செல்லும் என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை.

நாம் எல்லாருமே கோப உணர்வுடனும், அன்புணர்வுடனும் தான் பிறந்திருக்கிறோம். எந்த உணர்வை நாம் தழுவிக்கொள்வது என்பது தனிமனிதருடைய, குடும்பத்தினுடைய, சமூகத்தினுடைய, பண்பாட்டினுடைய அறிவார்ந்த தேர்வாக இருக்கிறது.

வெறுப்பினால் ஒருபோதும் அன்பை வெல்லமுடியாது. துப்பாக்கி குண்டு உயிரைப் பறிக்கலாம். ஆனால் கருத்தை காலாவதியாக்க இயலாது. கருத்துகள் விதைகளைப் போன்ற உயிர்த்தொடர்ச்சியைக் கொண்டவை. காந்தியின் கருத்துகள் மார்ட்டின் லூதர் கிங்கை பாதித்தன. அவர் காந்தியினுடைய சிந்தனையின் தொடர்சியாகக் கூட தன்னை எண்ணிக் கொண்டார். மார்ட்டின் லூதர் கிங்கை, அறிஞர் ஜான் ரஸ்கினும் தன் நூல்களால் பாதித்திருந்தார். மார்ட்டின் அடிப்படையில் அன்பைப் பற்றி மிக விரிவாக பேசி வலியுறுத்தும் கிறித்துவத்தை பயின்ற ஒரு பாதிரியார்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

அறிஞர் ஜான் ரஸ்கின், குற்றவாளிகளை சமூகத்தின் உற்பத்திப்பொருட்கள் என்கிறார். வாழ்வியல் கலையைக் கற்றுக்கொண்டால், நேசத்துக்குரிய அனைத்தும் – அதாவது பாதையோரத்தில் பூத்துக்கிடக்கும் காட்டு மலர், காட்டுப் பறவைகள், காட்டுவாழ் உயிரினங்கள், கால்நடைகள் அனைத்தும் அவசியமானவை என்பதை கடைசியில் கண்டுகொள்ள முடியும். ஏனென்றால் உணவினால் மட்டுமே மனிதன் வாழ்ந்துவிட முடியாது என்று சொல்கிறார் அவர். இது நமது வள்ளலாரின் வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் குரல்தான். ஆனால் இன்னும் உலகளாவியது. ஒரு குழந்தைக்கு உதவுவதற்காக குனியும் மனிதனைப் போன்று உயரமான மனிதர்கள் யாரும் கிடையாது என்கிறார் ரஸ்கின். குழந்தை என்ற இடத்தில் சகமனிதன் என்று நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

வெறுப்புணர்விலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி கல்விதான். வீடுகளிலும், பள்ளிகளிலும், சமூகத்திலும் கற்றுக் கொடுக்கப்படுகின்ற கல்வி. நமது சாதிய அமைப்பில் நாம் உடைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த உடைப்பு மிக எளிமையானது: அண்டை வீட்டாருடன் உறவாடுவது, எதிர்ப்பில் ஈடுபடுபவரிடம் பேசுவது. அடுத்தவர் மீதான அன்பே வெறுப்பை குணப்படுத்திடும் மருந்து.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

A

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.