புதுடில்லி : புதிய பார்லி., கட்டடத்தின் உச்சியில் வைத்துள்ள தேசிய சின்னத்தில், சிங்கம் கர்ஜிப்பது போல மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில், 19.6 அடி உயரம், 9,500 கிலோ எடை உள்ள வெண்கலத்தாலான இந்திய அரசின் தேசிய சின்னத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.அசோக சக்கர பீடத்தில் நான்கு சிங்கங்கள் நிற்கும் இந்த தேசிய சின்னம் குறித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
இது பற்றி லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘புதிய பார்லி., உச்சியில் வைத்துள்ள அசோக சக்கர பீடத்தில் இருக்கும் கிர் சிங்கத்தின் முகம், நம் தேசிய சின்னமாக உங்களுக்கு தோன்றுகிறதா என பாருங்கள். தயவு செய்து ஆராய்ந்து, தேவைப்பட்டால் மாற்றம் செய்யுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
திரிணமுல் காங்., ராஜ்ய சபா உறுப்பினர் ஜவஹர் சிர்கார், தேசிய சின்னத்தின் இரு மாறுபட்ட படங்களை ‘டுவிட்டரில்’ வெளியிட்டு கூறுகையில், ‘அசல் தேசிய சின்னத்தில் உள்ள சிங்கத்தை பாருங்கள். அது அமைதியாக, நம்பிக்கையுடன் காட்சி அளிக்கிறது. மோடி வைத்துள்ள தேசிய சின்னத்தில் சிங்கம் கர்ஜிப்பது போல இருக்கிறது. இது தேவையற்றது’ என்றார்.
”தேசிய சின்னத்தில் சிங்கங்களை கோபமாக காட்டுவதுதான் மோடியின் புதிய இந்தியா,” என, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement