அதிக வாக்கு வெற்றியுடன் அதிபர் பதவியை பிடித்த கோத்தபய ராஜபக்சே இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்…

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே  தனது குடும்பத்தினருன் இன்று அதிகாலை 3மணி அளவில் விமானப்படை விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் சென்றதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு மாலத்தீவு அடைக்கலம் கொடுத்துள்ளது.

நாட்டின் வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்சே வரலாற்றில் இடம் பிடித்திருந்தார். அதே போன்று தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவியில் இருந்து விலகும் முதலாவது ஜனாதிபதியாகவும் கோத்தபயராஜபக்சே வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர். போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். சில போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே தங்கி உள்ளனர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி கடற்படை முகாமில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டது.

இந்த சூழலில் அவர்  இன்று (13ந்தேதி)  முறைப்படி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். இந்தநிலையில், அவர் பதவி விலகலுக்கான கடிதத்தில் கையெழுத்திட்டு விட்டு, இன்று அதிகாலை 3மணி அளவில்,  விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் தனது மனைவியுடன்  மாலத்தீவு தலைநகர் மாலே பகுதிக்கு சென்று தஞ்சமடைந்துள்ளதாக  சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,அங்கிருந்து வேறு ஆசிய நாட்டிற்கு அவர் செல்வார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், மக்களால் தடுத்து நிறுத்தப்பட்ட கோத்தபய சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோத்தபய ராஜபக்சே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானத்தினூடாக சென்றுள்ளதாக இலங்கை விமானப்படைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறிய விடயத்தை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.